ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

கேள்வி 1: ‘விடுதலை’ நாளேட்டில் வெளிவரும் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாற்று ஆவணங்களான “இந்நாள் – அந்நாள்” எனும் பெட்டிச் செய்திகளைத் தொகுத்து நூலாக வெளியிட ஆவன செய்வீர்களா?

–  பா. ஆனந்தன், திருவொற்றியூர்.

பதில் 1: ‘விடுதலை’ வாசக நேயர்களான தங்களைப் போன்றவர்கள் இப்படி அடிக்கடி எழுதி அனுப்பும் அரிய கருத்துகளை – யோசனையை செயலாக்குவதுதான் எங்களது இனிய கடமை அல்லவா!

••••

கேள்வி 2: “இந்தியாவின் தொழில்துறைப் பணியாளர்களின் சக்தி மய்யமாகத் தமிழ்நாடு திகழ்கிறது” என்று ஒன்றிய பா.ஜனதா அரசு, ‘திராவிட மாடல்’ அரசைப் பாராட்டி இருப்பதிலிருந்து என்ன தெரிகிறது?

 – இரா.சித்ரா, சிதம்பரம்.

பதில் 2: “எங்கெங்கு காணினும் (இச்) சக்தியடா, அது ஏழு கடல் தாண்டியும் செல்லும் அடடா!” என்று பாடத் தோன்றும்!

••••

கேள்வி 3: ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திராவிட ஆட்சியின் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைப்பது (04.09.2025) குறித்து…?

– சீதாலட்சுமி, திண்டிவனம்.

பதில் 3: கல்வி அறிவின் முக்கியப் பகுதி பட்டறிவு – பகுத்தறிவு, எதிர்நீச்சல், துணிச்சல் – சமூக விஞ்ஞானி பெரியார் என்ற தத்துவத்தின் லட்சியப் பயணங்கள் தடைபடாத ஒன்று என்ற பாடத்தை எல்லோருக்கும்  எடுத்துச் சொல்லும் வரலாற்றுப் பெருமைக்குரிய நிகழ்வு–! ஏற்கெனவே ‘ஆய்வாகி’ இப்போது படமும் பாடமும் ஆகியுள்ளார் பெரியார் என்ற அறிவாயுதம்!

••••

கேள்வி 4: ஜெர்மனியைச் சேர்ந்த 26 தொழில் நிறுவனங்கள் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது, தமிழ்நாட்டின் தொழில் வளத்திற்கும் – வேலை வாய்ப்புக்கும் எவ்வகையில் உதவும்?

– ஜெ.பாபு ஜனார்த்தனன், பொத்தேரி.

பதில் 4: புதிய வேலைவாய்ப்பு, தொழி லாளர்கள் – பணித் தோழர்கள் மூலம் நம் நாட்டுப் பொருளாதார வளர்ச்சி மேலும் மேலும், தமிழ்நாட்டின் பொருளாதார அடிக்கட்டுமானத்தை வலுவாக்கிப் பலப்படுத்தும்.

••••

கேள்வி 5: “தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த 394 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கும் நிலையில் பி.ஜே.பி. மற்றும் அ.தி.மு.க. கட்சித் தலைவர்கள் அதனைக் குறை கூறுவது ஏன்?

– அ.ஆகாஷ், அரூர்.

பதில் 5: நான்கு ஆண்டுகளில் சொன்னதில் பெரும்பகுதியோடு, கூடுதலாக சொல்லாத திட்டங்களையும் (புதியவை) செய்து காட்டும் ‘திராவிட மாடல்’ அரசு. இதற்கு இணை உண்டா?

வாயால் வடை சுடும் வக்கிரக்காரர்களை தமிழ்நாட்டு மக்கள் – வாக்காளர்கள் – புறந்தள்ளுவது உறுதி!

••••

கேள்வி 6: அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பால் ‘டாலர் சிட்டி’ என அழைக்கப்படும் திருப்பூர் மாநகரம் தத்தளிக்கின்ற அவல நிலைக்குத் தீர்வு  என்ன?

– ப.திருநாவுக்கரசு, திருப்பூர்.

பதில் 6: தயவு செய்து ‘விடுதலை’யில் (29.8.2025) வெளி வந்துள்ள தீர்வையும் உள்ளடக்கிய நமது அறிக்கையைப் படியுங்கள் – கையடக்க ஆவண வடிவத்தில் (PDF) கிடைக்கிறது.

••••

கேள்வி 7: பா.ஜனதா ஆளும் டில்லியில் கடும் மழையின் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பச்சிளம் குழந்தைகள், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் கடும் அவதிப்படுவதோடு குடிநீருக்கும், உணவுக்கும் கூட வழியின்றித்  தவிக்கும் நிலை – இந்தியாவின் தலைநகரிலேயே இப்படி இருக்கலாமா?

– கா.அட்சயா, புதுடில்லி.

பதில் 7: இதுபோன்ற நிலையில், தமிழ்நாடு அரசைக் கண்மூடித்தனமாக விமர்சிக்கும் அண்ணாமலையைத்தான் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுத் தொண்டு செய்யவும், டில்லி பா.ஜ.க. அரசை விமர்சிக்கவும் அனுப்ப வேண்டும்.  மக்கள் எந்தப் பகுதியில் கஷ்ட நஷ்டங்கள் படும்போதும் நமது உதவிதான் முக்கியம். (விமர்சனங்கள் விழுமியவை ஆவதே நன்மை. உள்துறை அமைச்சர் கண்காணிப்பில் உள்ள பகுதி டில்லி தலைநகர் என்பதும் கவனத்திற்குரியது.)

••••

கேள்வி 8: இட ஒதுக்கீடு பிரச்சினையில், மராத்தா சமூகத்தினரின்  போராட்டத்தால் மகாராட்டிர பா.ஜ.க. அரசு பணிந்துள்ளதே?

– மு.ஆம்ஸ்ட்ராங், பெங்களூரு.

பதில் 8: சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சொன்னது. “மண்டல் காற்று எனக்குப் பிறகும் வீசவே செய்யும். ஆதிக்கவாதிகளைக் கண் விழிக்க வைக்கும்.” எவ்வளவு முன்னோட்டம்! “மண்டல் அறிக்கையை அமல் படுத்த 10 முறைகூட பதவியை (பிரதமர்) இழக்கத் தயார்” என்ற ஒப்பற்ற மாமனிதர் அவர். ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ – புரிகிறதா?

••••

கேள்வி 9: இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 18 வரதட்சணை மரணங்கள் நடைபெறுவதாக ‘தேசிய குற்ற ஆவணப் பணியகம்’ புள்ளி விவரத்துடன் வெளியிட்டிருப்பது இந்தியா விற்குத் தலைக்குனிவு அல்லவா?

– இரா.அலமேலு, செங்குன்றம்.

பதில் 9: ‘வந்தே மாதரம் – பாரத் மாதாக்கீ ஜே’, ‘நாரி சக்தி’யைக் காப்பாற்றும் லட்சணமா இது?

••••

கேள்வி 10: தி.மு.க.வின் ‘எக்ஸ்’ பக்கத்தில் ‘சமூகநீதி எனும் பெருநெருப்பு’ என்ற குறும்படம் ஏ.அய். தொழில் நுட்பத்தில் வெளியிட்டிருப்பது பற்றி?  

– க.காமராஜ், செய்யாறு.

பதில் 10: ‘தீ’ திக்கெட்டும் பரவுவது உறுதி!

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *