மசோதாக்கள் மீதான முடிவு காலக்கெடு அவசியமே!

3 Min Read

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததற்கு பல்வேறு மாநில அரசுகள் (26.8.2025) தங்கள் வாதங்கள் மூலம் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தது.

இவ்வாறு நீதித்துறை உத்தரவிட முடியுமா? என விளக்கம் கேட்டு 14 கேள்விகள் அடங்கிய குறிப்பினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு அனுப்பினார். இதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்ஹா, அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் (26.8.2025) 4-ஆம் நாள் விசாரணை நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதற்கு எதிராக பாஜக ஆளும் மாநில அரசுகள் சார்பில் வழக்குரைஞா்கள் வாதங்களை முன்வைத்தனர்.

மகாராட்டிரா அரசு தரப்பு வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே: ஒன்றிய அரசையும் மாநில அரசையும் இணைக்கும் பிரதிநிதி ஆளுநர்.  மசோதா மீதான ஒப்புதலை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு ஒரு மசோதாவை அனுப்பினால் அதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் என ஹரீஷ் சால்வே வாதாடினார்.

அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘மசோதாக்கள்மீது ஆளுநர் காலவரையின்றி முடிவெடுக்காமல் இருக்கலாமா? ஆளுநர் மசோதாவை ஏன் தடுத்து நிறுத்துகிறார் என நீதிமன்றம் கேட்கக் கூடாதா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஹரீஷ் சால்வே, ‘இல்லை; ஆளுநர் மசோதா மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று மட்டுமே நீதிமன்றம் கேட்கலாம்’ என தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநில அரசு தரப்பு வழக்குரைஞர் மனிந்தர் சிங்: மசோதாக்கள்மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதை உச்சநீதிமன்றம் பரிசீலித்து உரிய பதிலளிக்க வேண்டும் என வாதிட்டார்.

ஒடிசா, உத்தரப் பிரதேச தரப்பு வழக்குரைஞர் கே.எம்.நடராஜ்: குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு விதிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? காலக்கெடுவை கடைப்பிடிக்கத் தவறினால், மசோதா ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படுமா என பலகேள்விகள் எழுகின்றன. இதற்கு முந்தைய வழக்குகளில் ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுத்த பின்னா்தான், அதுதொடர்பான வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் ஆளுநா் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் முன்பே உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு காலக்கெடு விதித்தது என வாதிட்டார்.

சத்தீஸ்கர் தரப்பு வழக்குரைஞர் மகேஷ் ஜெத்மலானி: மசோதாவை ஒப்புக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அப்படியிருக்க மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதிப்பது கிட்டத்தட்ட அவமரியாதைக்குரியது என வாதிட்டார். இதேபோல மத்தியப் பிரதேசம், கோவா உள்ளிட்ட மாநிலங்களும் காலக்கெடு விதிக்கப்பட்டதற்கு ஆட்சேபத்தைப் பதிவு செய்தன.

இந்த விவாதங்கள் என்ன சொல்லுகின்றன? பிஜேபி ஆளும் மாநில அரசுகள் ஆளுநர் பக்கம் நிற்கின்றன. பிஜேபி அல்லாத கட்சிகள் ஆளுநராக இருந்தாலும், குடியரசுத் தலைவராக இருந்தாலும் காலக்கெடு அவசியம் என்பதை வலியுறுத்துகின்றன.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது உண்மையானால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றங்கள், நிறைவேற்றும் மசோதாவை காலவரையறையின்றி ஓர் ஆளுநர்  வைத்துக் கொள்வது எந்த வகையில் சரியானது?

சட்டமன்றத்தின் காலம் 5 ஆண்டுதான்; அந்த 5 ஆண்டு காலம் வரைகூட சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் கிடப்பில் போடலாமா? அப்படி யானால் ஆள்வது ஆளுநரா என்ற கேள்வி எழாதா?

உச்சநீதிமன்றம் ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் கெடு நிர்ணயித்து தீர்ப்பு வழங்கிய பிறகு, குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பிய காரணத்தால் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே எடுத்த – தெரிவித்த முடிவிலிருந்து பின்வாங்காது என்ற கருதுகிறோம்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *