புதுடில்லி, செப்.4 இந்தியப் பெண்கள் ‘சேமிப்பு’ என்ற மனநிலையிலிருந்து தற்போது ‘முதலீடு’ என்ற பார் வைக்கு மாறியுள்ளனர். தங்கள் பணத்தை தெளிவான இலக்குகளுடன் அவர்கள் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். நாட்டின் நிதி சூழலை மாற்றியமைப் பதில் பெண் முதலீட்டாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இதுதொடர்பாக டிஜிட்டல் வெல்த் மேனேஜ்மென்ட் முதலீட்டுத் தளமான பின்எட்ஜ் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது கடந்த 2012-இல் புதிய முதலீட்டாளர்களில் பெண்களின் பங்கு 18%-மாக மட்டுமே இருந்தது. இன்று 42% அதிகரித்துள் ளது. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் முதலீட்டு நடவடிக்கைகளில் பெண்களின் பங்கேற்பு 50% அதிகரித்துள்ளது. மேலும், 2028-ம் ஆண்டுக்குள் அனைத்து புதிய முதலீட்டாளர் களிலும் பாதிக்கும் மேற்பட்டவர் கள் பெண்களாக இருப்பார்கள். பெண்கள் இப்போது பணியிடத்தில் சிறந்து விளங்குகிறார் கள். இதனால், அவர்களிடம் நிதி சுதந்திரம் மற்றும் விழிப்புணர்வு பெருமளவில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஓய்வூதியத் திட்டமிடல் ஒரு முக்கிய முன்னுரிமை யாக அவர்களிடம் உருவெடுத் துள்ளது. மேலும், 30.82% பெண்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு பின்எட்ஜ் தெரிவித்துள்ளது.
வரவேற்கத்தக்க முடிவு
மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு மய்யம் அமைக்க வேண்டும்
அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை உத்தரவு
சென்னை, செப்.4 2025-2026-ஆம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு தேர்வு மய்யம் அமைப்பது தொடர்பான கருத்துருவை சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் இருந்து பெற்று கல்வித்துறை அதிகாரிகள் அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பிவைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை சார்பில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
2025-ஆம் ஆண்டு பிளஸ்-2 தேர்வுக்கான ஓராண்டுக்கு மட்டும் தேர்வு மய்யம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மய்யமாக செயல்பட கருத்துருவை அனுப்பி இயக்குநரின் ஆணை பெறவேண்டும்.முதன்மை கல்வி அதிகாரியின் பரிந்துரையின்றி பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவுக்கு பிறகு பெறப்படும் கருத்துருக்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
புதிய தேர்வு மய்யங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும் பள்ளிகள் விதிகளின்படி தகுதியுள்ளதா? என உறுதிசெய்த பின்னரே அதிகாரிகள் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு விதிகளின்படி இல்லாத பள்ளிகளை பரிந்துரைத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்துக்கு பரிந்துரை செய்யப்படும்.
மேலும் 10 கி.மீ. தூரத்துக்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு எழுத தேர்வு மய்யங்களுக்கு செல்லும் மாணவர்கள், அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே புதிய தேர்வு மய்யம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்வு மய்யங்களுக்கு விண்ணப்பிக்கும் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு பெறாத பள்ளிகள் தேர்வுமையமாக செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. அதன்படி, வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் கருத்துருவை சமர்ப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.