புதுடில்லி, செப்.3- சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் இணைய வழி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதையடுத்து ட்ரீம் 11, எம்.பிஎல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் எம்.பி.எல் நிறுவனம் இந்தியாவில் தனது 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. பணம் கட்டி விளையாடும் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், வருவாய் இழப்பை சமாளிக்க பணிநீக்கம் செய்ய முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
இலவசமாக விளையாடக்கூடிய விளையாட்டுகளில் இனி கவனம் செலுத்த முடிவு செய்து உள்ளதாகவும் அமெரிக்க சந்தைகளில் வணிகத்தை மேம்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் எம்.பி.எல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டிங், நிதி, செயல்பாடுகள், லீகல் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் என்ணிக்கை தோராயமாக 300 முதல் 500 வரை இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.