வாசிங்டன், செப்.3– இறக்குமதி மருந்துக்கு 200 சதவீத வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
மருந்துக்கு விலக்கு
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஏறத்தாழ அனைத்து நாடுகளைச் சேர்ந்த பொருட்களுக்கும் அதிக வரி விதித்துள்ளார்.கார்கள், உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட பொருட்களை குறி வைத்து வரி போட்டுள்ளார்.
ஆனால் தனது வர்த்தக போரில் மருந்துகளை மட்டும் விட்டு வைத்திருந்தார். தற்போது அதற்கும் வரி விதிக்கதிட்டமிட்டுள்ளார்.
பல பத்தாண்டுகளாக மருந்துப் பொருட்கள் எவ்வித வரியும் இன்றி அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக் கப்பட்டன.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் இறக்குமதி மருந்து பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்க அவர் திட்டமிட்டுள்ளார். முதல்கட்டமாக, அமெரிக்காவுக்கும், அய்ரோப்பாவுக்கும் இடையே இது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, அய்ரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் மருந்துப் பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்படும்.
200 சதவீத வரி
ஆனால், மற்ற நாடுகளில் இருந்து வரும் மருந்து பொருட்கள் மீது 200 சதவீத வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டி வருகிறார்.
அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனங்கள், குறைந்த செலவு காரணமாக இந்தியா மற்றும் சீனாவுக்கும், வரிச்சலுகை காரணமாக அயர்லாந்து, சுவிட்சர் லாந்து போன்ற நாடுகளுக்கும் மருந்து உற்பத்தி தொழிற்சாலையை மாற்றி விட்டன.
ஆனால், அந்த நிறுவனங்களை அமெரிக்காவுக்கு திரும்பி வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் மருந்து உற்பத்தி செய்தால் வரியே கிடையாது என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட சில மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளன.
தட்டுப்பாடு
இதன்மூலம் அமெரிக்கர் களுக்கு குறைந்த விலையில் மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று டிரம்ப் உறுதி அளித்துள்ளார். ஆனால், அதற்கு எதிர்மறையாகவே நடக்கும் என்று வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
மருந்து வினியோக சங்கிலி அறுபட்டு,மலிவு விலை மூலக்கூறு மருந்துகள் அமெரிக்காவை விட்டு வெளியேறும் என்றும், அதனால் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கணித்துள்ளனர்.
மருந்துகள் விலை உயர்வதுடன், மருத்துவ காப்பீட்டுக்கும் அதிக பணம் செலுத்த வேண்டி இருக்கும் என்றும், குறைந்த வருவாய் பிரிவினரும், முதியோரும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்கள்.
