அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பெப்சி, கோக-கோலா, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர்.
50 சதவீதி வரி விதிப்பு
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இது உலக நாடுகளுக்கு விதிக்கும் மிக அதிகபட்ச வரி ஆகும். இதனால் இந்திய பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியர்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான மனநிலை உருவாகி உள்ளது. குறிப்பாக, பெப்சி, கோக-கோலா, சப்வே, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர்.
அமெரிக்க தயாரிப்புகள் புறக்கணிப்பு
இதனிடையே, உலகின் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டுமென்றால், உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் என இந்தியர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறத்தி வருகிறார். அமெரிக்காவின் அதிக வரி காரணமாக, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்க பொருட்களை ஏற்கெனவே புறக்கணிக்கத் தொடங்கி விட்டன.
இந்த சூழ்நிலையில், 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவும் புறக்கணிக்கும்போது அமெரிக்க நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும். மெக்டொனால்ட்ஸ் உணவ கங்கள் மேற்கு மற்றம் தென்னிந்தியாவில் நடத்தும் வெஸ்ட்லைப் புட்வேர்ல்டு கடந்த நிதியாண்டில் ரூ.2,300 கோடி வருவாய் ஈட்டியது. இது முந்தைய ஆண்டைவிட 50% அதிகம்.”இதுபோல பெப்சிகோ நிறுவனம் ரூ.8,200 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இந்நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்பின் இந்தியப் பயணம் ரத்து
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிற்கு டிரம்ப் வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிரம்ப்பின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தகப் பிரச்சனை நீடிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.