முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக. 31– அமெரிக்கா வின் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக் கப்பட்ட 50 சதவீத சுங்க வரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து இந்திய ஏற்றுமதித் தொழில்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாகக் கொள்கை நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் ஒன்றிய அர சுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சில முக்கிய அம்சங்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
அமெரிக்கா, தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாகும். கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 31% அமெரிக் காவிற்குச் சென்றுள்ளது. எனவே, அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கை தமிழ்நாட்டிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் இந்த வரி உயர்வால் தமிழகத்திற்கு மட்டும் $3.93 பில்லியன் இழப்பு ஏற்படும் என Guidance Tamil Nadu நடத்திய பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, துணிநூல், இயந்திரங்கள், வைரம், நகைகள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற துறைகள் அதிகமாகப் பாதிக்கப்படும். இந்தத் துறைகளில் 13% முதல் 36% வரை வேலை இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவின் துணிநூல் ஏற்றுமதியில் தமிழகம் 28% பங்களிக்கிறது. திருப்பூர் மாவட்டம் மட்டும் கடந்த ஆண்டு சுமார் ₹40,000 கோடி வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டியுள்ளது. இந்த வரி உயர்வால் துணிநூல் துறைக்கு மட்டும் சுமார் $1.62 பில்லியன் இழப்பு ஏற்படக்கூடும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.
கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி பிரதமருக்குக் கடிதம் எழுதிய முதல்வர், பாதிக்கப்பட்ட தொழில் களுக்கு சிறப்பு நிவாரணத் திட்டங்கள், கடன் வசதிகள், வட்டி மானியங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
மேலும், ஏற்றுமதிக்கான RoDTEP திட்டத்தை 5% ஆக உயர்த்த வேண்டும் என்றும், விரைவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை (FTAs) முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். பருத்தி இறக்குமதிக்கான 11% சுங்கவரியை டிசம்பர் 31 வரை நிறுத்தி வைத்த ஒன்றிய அரசின் முடிவைப் பாராட்டிய முதல்வர், இது தற்காலிக நிவாரணம் மட்டுமே என்றும், நிரந்தரத் தீர்வுகள் தேவை என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள்:
அமெரிக்காவின் வரிவிதிப்புக்குக் காத்திருக்காமல், தமிழ்நாடு அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய சாயப்பட்டறைகள் அமைக் கவும், ஏற்கனவே உள்ளவற்றைப் புதுப்பிக்கவும் மூலதன முதலீட்டு மானியம் அறிவித்துள்ளது. தொழில் நுட்பத் துணிநூல்களை ஊக்குவிக்க 2023-ல் சிறப்புத் திட்டமும், 2025-ல் தமிழ்நாடு தொழில்நுட்பத் துணிநூல் மிஷன்-னும் தொடங்கப்பட்டுள்ளது.
பன்னாட்டுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் வர்த்தகக் கொள்கை போன்றவற்றில் ஒரு மாநில அரசால் செய்யக்கூடியவைக்கு வரம்புகள் உள்ளன. எனவே, ஒன்றிய அரசு விரைந்து செயல்பட்டு, ஒருங்கிணைந்த கொள்கைகளை உருவாக்கி, இந்திய ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில் ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்படத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.