கீவ், ஆக. 31– உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு அய்ரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின்படி, 29.8.2025 அன்று அதிகாலையில் மூன்று ஏவுகணைகள் கீவ் நகரைத் தாக்கின. இதில் அய்ந்து மாடிக் குடியிருப்புக் கட்டடம் முற்றிலும் சேதமடைந்தது. உயிரிழந்தவர்களில் மூன்று பேர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், அய்ரோப்பிய ஒன்றியத் தின் கட்டடமும், அதன் அருகே உள்ள பிரிட்டிஷ் மன்றத்தின் கட்டடமும் சேதமடைந்தன. உக்ரே னிய அதிகாரிகள் தெரி வித்ததன்படி, ரஷ்யா கிட்டத்தட்ட 600 ஆளில்லா வானூர்திகளையும் (drones) 30க்கும் அதிகமான நீண்ட தூர ஏவுகணைகளையும் பயன்படுத்தியுள்ளது.
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்தத் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், இது ரஷ்யா போரைத் தொடர விரும்புவதையே காட்டுவதாகக் குறிப் பிட்டார். அதேவேளையில், இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்குதல் நடத்தி வருவதாகவும், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர விரும்புவதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதல் குறித்து அதிருப்தி தெரிவித் ததாகவும், இது அவருக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.