ஹனோய், ஆக. 31– வியட்நாமின் தேசிய நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அந்நாடு சுமார் 14,000 சிறைக்கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவுள்ளது. விடுவிக்கப்படவுள்ளவர்களில் 18 நாடுகளைச் சேர்ந்த 66 வெளிநாட்டு கைதிகளும் அடங்குவர். இந்த ஆண்டு விடுதலை செய்யப்படும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, வியட்நாமின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகம் என்று பொதுப் பாதுகாப்புக்கான துணை அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, வட வியட்நாம் சைகோன் மாநிலத்தைக் கைப்பற்றியதன் 50ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 8,000-க்கும் அதிகமான சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்தவர்கள் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் இந்த பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். 2009 ஆம் ஆண்டு முதல், வியட்நாம் சுமார் 100,000 சிறைக்கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.