ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அந்தர்பல்டி ! யாரையும் ஓய்வு பெறுமாறு கூறவில்லையாம்!

2 Min Read

புதுடில்லி, ஆக.30 ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன். ஆனால், நாட்டின் பாரம்பரியத்தையும், சரித்திரத்தையும் புரிந்து கொள்வது முக்கியம். வேத காலத்தை சேர்ந்த 64 அம்சங்கள் தற்போதும் பொருத்தமானவை. அவை கற்பிக்கப்பட வேண்டும்.

குருகுல கல்வி முறையை வழக்கமான கல்விமுறையுடன் இணைக்க வேண்டும். அதற்கு மாற்றாக கொண்டுவர சொல்லவில்லை. குருகுல கல்வி என்பது பின்லாந்தில் உள்ள கல்வி மாதிரி போன்றதுதான். கல்வியில் முன்னணியில் உள்ள பின்லாந்தில், ஆசிரியர்களுக்கு கற்பிப்பதற்காக தனியாக ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. அங்குள்ள மக்கள்தொகை குறைவு என்பதால், பலர் வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள்தான். எனவே, அவர்கள் எல்லா நாடுகளின் மாணவர்களையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

அங்கு 8-ஆம் வகுப்புவரை மாணவர்களின் தாய்மொழியில் கற்றுத்தரப்படுகிறது. எனவே, குருகுல கல்வி என்பது ஆசிரமத்துக்கு சென்று அங்கு வசிப்பது என்று அர்த்தம் அல்ல. பாரம்பரியத்தை அறிந்து கொள்வது என்று அர்த்தம்.

புதிய கல்வி கொள்கை, சரியான திசையில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை. பல ஆண்டுகளுக்கு முன்பே நமது நாட்டின் கல்விமுறை அழிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வந்து ஆண்டவர்களுக்கு நாம் அடிமைப்பட்டு பழகிப்போனதால், புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் கட்டாயப்படுத்தியோ, ஆசை காட்டியோ அதை திணிக்கக்கூடாது. மத மாற்றமும், சட்டவிரோத குடியேற்றமும்தான் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுக்கு காரணங்கள். அவற்றை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமுதாயமும் தனது பங்குக்கு ஏதேனும் செய்ய வேண்டும். சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது. அனைவரும் அதிக பட்சம் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் குறைந்த பட்சம் 3 மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அனைவருக்கும் சமமான பணியை கொடுத்துள்ளது. அதை செய்து வருகிறோம்.

பா.ஜ.க.வுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருபோதும் மோதல் இல்லை. பா.ஜ.க.வின் முடிவுகளை எடுப்பது ஆர்.எஸ்.எஸ். என்பதும் உண்மையல்ல. பரிந்துரைகளை மட்டுமே வழங்குகிறது. பா.ஜ.க.வே நாட்டை வழிநடத்துகிறது. அதில் பா.ஜ.க.வினர் நிபுணர்கள். 75 வயதானால் ஓய்வுபெற வேண்டும் என நான் ஒருபோதும் சொல்லவே இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத் 75 வயது நிறைவடைந்தவர்கள், மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இது பிரதமர் மோடியை குறிப்பிட்டு சொல்லப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. தற்போது ஓய்வு குறித்து மோகன் பகவத் பேசியது, அவரது முந்தைய சர்ச்சை கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *