பாட்னா, ஆக.30– சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த சிறப்புத் திருத்தத்தை கண்டித்தும், தேர்தல் ஆணையம் வாக்கு திருடுவதாக குற்றம் சாட்டியும் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி, பீகாரில் வாக்காளர் உரிமைப் பயணம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை நேற்று (29.8.2025) அவர் வெளியிட்டார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் தள பதிவை தனது சமூக ஊடக தளத்தில் அவர் பகிர்ந்து இருந்தார். அதில், ‘தேர்தல் ஆணையத்தின் மாயாஜாலத்தை பாருங்கள். ஒரு முழு கிராமத்தையும் ஒரே வீட்டில் குடியேற்றி இருக்கிறது’ என குறிப்பிட்டு இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் அந்த வலைத்தளப் பதிவில், ‘கயா மாவட்டத்தின் பராசட்டி தொகுதிக்கு உட்பட்ட நிடானி கிராமத்தை சேர்ந்த அனைத்து 947 வாக்காளர்களும் வீட்டு எண் 6-இல் வசிப்பதாக காட்டப்பட்டு உள்ளது’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அதில், ‘இது வெறும் ஒரு கிராமத்தை பற்றியது. மாநில மற்றும் தேசிய அளவில் நடக்கும் முறைகேடுகளின் அளவை நாம் கற்பனை செய்து பார்க்க மட்டுமே முடியும்’ என்றும் கூறப்பட்டு இருந்தது.
ராகுல் காந்தியின் இந்த வலைத்தள பதிவு மற்றும் குற்றச்சாட்டு அரசியல் தளத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேநேரம் ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்து இருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறுகையில், ‘அசல் தொடர் எண்கள் இல்லாத கிராமங்கள் அல்லது குடிசைப் பகுதிகளில் கற்பனையான வீட்டு எண் வழங்கப்படுகிறது. வாக்காளர்களைச் சேர்க்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக இது செய்யப்படுகிறது’ என குறிப்பிட்டு இருந்தார்.