புதுடில்லி, ஆக. 24- “தற்போது இந்திய ஜனநாயகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருவது போலவே அரசியலமைப்புச் சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது” என்று இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய ஒன்றல்ல
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றியபோது அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினேன். அந்த வேட்கையின் காரணமாகவே தற்போது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறேன். ஆகவே, இந்தப் பயணம் எனக்கு புதிது கிடையாது.
பொருளாதார நிலையில் பற்றாக்குறை குறித்து பல தரப்பினரும் விவாதிக்கும் வேளையில், இப்போது இந்திய ஜனநாயகத்தில் இத்தகைய பிரச்சினை எழுந்திருக்கிறது. அதாவது, நமது நாட்டின் ஜனநாயகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருகிறது. இதுபோலவே அரசியலமைப்புச் சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் நானும் போட்டியிடுகிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இது எங்கள் இருவருக்கும் இடையிலான போட்டி கிடையாது. மாறாக, இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி இது.
நான் ஒரு ஜனநாயகவாதி
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஆர்.எஸ்.எஸ்.காரர். ஆனால், நான் எந்த சித்தாந்தத்தையும் பின்பற்றவில்லை என்றாலும், நான் ஒரு ஜனநாயகவாதி. அதன் அடிப்படையில்தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுப்பப்படுகின்றன. ‘நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது ஒருவகையான போராட்டம்’ என்று மறைந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறியதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றார்.
அமித் ஷாவுக்கு பதில்
மேலும், “ஒரு வழக்கில் நான் நக்சல் தீவிரவாதத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் நான் எந்தக் கருத்தையும் பதிவு செய்ய விரும்பவில்லை. அந்தத் தீர்ப்பு என்பது என்னுடைய தீர்ப்பு கிடையாது. அது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. மொத்தம் 40 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் முழு விவரங்களையும் அமைச்சர் அமித் ஷா படித்து பார்க்க வேண்டுகிறேன்” என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.
அமித்ஷா கூறியது என்ன?
பி.சுதர்சன் ரெட்டி கடந்த 2011ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அப்போது சத்தீஸ்கரில் நக்சலைட்களை ஒடுக்க பழங்குடியின இளைஞர்கள் அடங்கிய தனிப்படை உருவாக்கப்பட்டது. இந்தப் படை ‘கோயா கமாண்டோஸ்’, ‘சல்வா ஜுடும்’ என்ற பெயர்களில் அழைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அந்தப்படை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி அதை உடனடியாக கலைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், டில்லியில் ‘மலையாள மனோரமா’ குழுமம் நடத்திய கருத்தரங்கு நிகழ்ச்சியின் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் அளித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நக்சலைட்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர் இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி. அவர் மட்டும் அந்த தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால், 2020ஆம் ஆண்டே நக்சல் தீவிரவாதம் முடிவுக்கு வந்திருக்கும். நக்சல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் சுதர்சன் ரெட்டி. இதனால் கேரளாவிலும் நக்சலைட் தாக்கம் ஏற்பட்டது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
செப்.9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. குடியரசுத் துணைத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இணைந்து தேர்வு செய்வார்கள். மக்களவையில் தற்போது 542 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது. அதேபோல் மாநிலங்களவையில் 239 உறுப்பினர்கள் உள்ளனர். 6 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, மகாராட்டிர மாநில ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ள நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய வைக்கும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டது. இதற்கிடையில், இந்தியா கூட்டணி சார்பில் அரசியல் சார்பற்ற ஒருவரை நிறுத்த ஆலோசனை நடைபெற்று, இறுதியாக ஆந்திராவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி பெயர் அறிவிக்கப்பட்டது. அவரும், இந்தியா கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவர் ஒவ்வொரு மாநிலமாக சென்று இந்தியா கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில், இன்று (24.8.2025) சென்னை வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசும் அவர், பின்னர் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். மேலும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அவர் விருந்தளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.