சென்னை, ஆக.20- சென்னையில் தற்போது 2ஆம் கட்டம் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116.1 கிலோ மீட்டர் தொலைவில் 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது. இதற்கிடையே, மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுப்படுத்தும் நோக்கில், கோயம்பேடு- ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டு சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது. அதாவது, கோயம்பேட்டில் தொடங்கி பாடிபுதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. மொத்தம் 21.76 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தடத்தில், 19 இடங்களில் மேம்பால ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.9,928 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 மேம்பாலச் சாலைகளுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரூ.2,442 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.