பாட்னா, ஆக.20- தேர்தல் ஆணையம் – பா.ஜனதா இடையே கூட்டு நிலவுகிறது. பீகாரில் ஒரு வாக்குகூட திருடவிட மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார்.
வாக்குகளை பறிக்கிறார்
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்தின்மீது ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, அங்கு ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்ற பயணத்தை நடத்தி வருகிறார். கடந்த 17-ஆம் தேதி அந்தப் பயணம் தொடங்கியது.
நேற்று (19.8.2025) 3-ஆவது நாள் யாத்திரை, கயா மாவட்டம் வாசிர்கஞ்சில் தொடங்கி, நவடா சென்றடைந்தது. அங்கு வாகனத்தின் உச்சியில் நின்றபடி ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது:-
வாக்காளர்களுக்கு அரசி யல் சாசனம் வாக்குரிமை அளித்துள்ளது. ஆனால் அந்த வாக்குரிமையை பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் பறிக்கிறார்கள்.
ஆனால், நானும், தேஜஸ்வி யாதவும், இங்கு நின்று கொண்டிருக்கிற மகா கூட் டணி தலைவர்களும் பீகாரில் ஒரு வாக்கு கூட திருட விட மாட்டோம். தேர்தல் ஆணையம் -பா.ஜனதா இடையே கூட்டு நிலவுகிறது. அரியானா, மராட்டியம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களை அந்த கூட்டணி ஏற்ெகனவே திருடி விட்டது.
மராட்டிய மாநிலத்தில், மாய வித்தை மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டசபை தேர் தலுக்கும் இடையே ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
அதானி – அம்பானி
தற்போது பீகாரில் புது பாணியில் தேர்தலை திருடி வருகிறார்கள். உங்கள் கண் எதிரில் திருட்டு நடக்கிறது. ஆனால் நாங்கள் அதை நடத்த விட மாட்டோம்.
முதலில் உங்கள் வாக்காளர் அட்டை போகும். பிறகு குடும்ப அட்டை போகும். பிறகு உங்கள் நிலம் அதானி, அம்பானியிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த நாடு, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு சொந்தமானது. அதானி, அம்பானி போன்ற சில பெரும் பணக்காரர்களுக்கு சொந்தமானது அல்ல. சில பணக்காரர்களுக்கு பலன் அளிப்பதற்காகத் தான், அனைத்து தவறான சட்டங்களும், ஜி.எஸ்.டி.யும், பணமதிப்பு இழப்பும் கொண்டுவரப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல் காந்தி தனது பேச்சின் தொடக்கத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட ஒருவரை பேச அழைத்தார். அந்த நபர் பேசுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தான் வாக்குச்சாவடி முகவராக இருந்ததாகவும், தற்போது தனது பெயர் நீக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.