சங்கரன்கோவில், ஆக.19- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சித் தேர்தலில் தலைவர் பதவியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது. 22 வாக்குகள் பெற்று கவுசல்யா வெற்றி பெற்றார்.
நகராட்சி தலைவர் பதவி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 13 வார்டு கள், தி.மு.க. 9. ம.தி.மு.க. 2 மற்றும் காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டு மற்றும் சுயேட்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த உமா மகேஸ்வரி, அ.தி.மு.க.வை சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், இருவரும் தலா 15 வாக்குகள் பெற்றதால் சமநிலை ஏற்பட்டது. எனவே, குலுக்கல் முறையில் நகராட்சி தலைவராக உமா மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக அ.தி.மு.கவை சேர்ந்த கண்ணன் என்ற ராஜூ 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 24 கவுன்சிலர்கள் சேர்ந்து நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். கடந்தஜூலை 18-ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது. தீர்மானத்துக்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதனால் உமா மகேஸ்வரி தலைவர் பதவியை இழந்தார். எனவே காலியாக உள்ள தலைவர் பதவிக்கு நேற்று (18.8.2025) தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் 6-ஆவது வார்டு உறுப்பினர் கவுசல்யா வெங்கடேஷ், அ.தி.மு.க. சார்பில் 26-ஆவது வார்டு உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் ஆகியோர் போட்டியிட்டனர்.
தி.மு.க. வெற்றி
மேனாள் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் தி.மு.க. உறுப்பினர் ஒருவரும் கூட்டத்துக்கு வரவில்லை. மீதமுள்ள 28 பேர் வாக்களித்தனர். நகராட்சி ஆணையாளர் சாம் கிங்ஸ்டன் முன்னிலையில் பகல் 11.15 மணிக்கு மேல் தேர்தல் தொடங்கியது. தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க.வைச்சேர்ந்த கவுசல்யா வெங்கடேஷ் 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வைச் – சேர்ந்த அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகள் மட்டும் பெற்றார். வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்த பிறகு கவுசல்யா வெங்கடேஷ் பதவி ஏற்றுக்கொண்டார்.