மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் காலக்கெடு நிர்ணய விவகாரம்:
குடியரசுத் தலைவர் கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கூடாது!
புதுடில்லி, ஆக.17- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்த விவகாரம் தொடர்பாக 14 கேள்விகளை கேட்டு உச்சநீதி மன்றத்திற்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு வருகிற 19 ஆம் தேதி விசாரிக்கிறது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்குரைஞர் ஹரீஷ் குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் கேட்டுள்ள கேள்விகளுக்கு தமிழ்நாடு, பஞ்சாப், தெலங்கானா ஆளுநர்களுக்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றம் விரிவாக பதில் தந்துள்ளது. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் ஆலோசனை கருத்துகளைக் கொண்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், அவற்றைத் திருப்பி அனுப்ப வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிய வழக்கில் குடியரசுத் தலைவர் ஆலோசனை கேட்கும் அதிகாரத்தை பயன்படுத்தி விளக்கம் கோர முடியாது. மறு ஆய்வு அல்லது சீராய்வு மனுதாக்கல் செய்ய முடியும். குடியரசுத் தலைவர் கேட்டுள்ள ஆலோசனைக்கு, கருத்துகள் அனைத்துக்கும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளிக்கத் தேவையில்லை. குடியரசுத் தலைவர் கேட்டுள்ள ஆலோசனை கருத்துகளில் கேட்டுள்ள கேள்விகளை விசாரித்துக் கூறப்படும் தீர்ப்பு எந்த நீதிமன்றத்தையும் கட்டுப்படுத்தாது. அத்தகைய தீர்ப்பு வழக்காடிகளுக்கு வழக்குரைஞர்கள் வழங்கும் ஆலோசனை போன்றதாக கருதப்படும்.
இவ்வாறு அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.