கலிபோர்னியா, ஆக.16 சமூக ஊட கங்களில் சிறுவர்கள் பெரியவர்களைப் போல் காட்டிக் கொண்டு, வயது வந்தோருக்கான உள்ளடக்கங்களை அணுகுவதைத் தடுக்க, YouTube நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த புதிய முறை தற்போது அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்துள்ளது.
வயதைக் கண்டறியலாம்
ஒரு பயனர் பதிவேற்றம் செய்யும் காணொலிகள், அவரது கணக்கு தொடங்கப்பட்ட காலம், காணொலிகளைப் பார்க்கும் விதம் போன்ற பல்வேறு தரவுகளை இந்த செயற்கை நுண்ணறிவு ஆய்வு செய்யும். இதன் மூலம், ஒருவரின் உண்மையான வயதை அது கண்டறிய முடியும் என்று YouTube நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறுவர்கள், பெரியவர்களுக்கான உள்ளடக்கங் களை அணுகுவதைத் தடுப்பதன் மூலம், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது இதன் முதன்மை நோக்கமாகும். இந்த அம்சம், பயனரின் வயதுக்கு ஏற்றவாறு அவர்களின் யுடுயூப் அனுபவத்தையும், பாதுகாப்பையும் மாற்றி அமைக்கும்.
வயதை உறுதி செய்ய வாய்ப்பு
புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பயனர் இளம் பிள்ளை என்று கண்டறியப்பட்டால், அவருக்கு ஓர் அறிவிப்பு அனுப்பப்படும். அந்த பயனர் தனது உண்மையான வயதை உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து உறுதிசெய்யலாம்.
இந்த நடவடிக்கை, சமூக ஊடகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. மேலும், இது சமூக ஊடக நிறுவனங்களின் பொறுப்புணர்வை அதிகரிப்பதற்கான ஒரு புதிய தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.