டாக்டர் நடேசன் சேலத்தில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்ததினால் பிராமணர்கள் கட்சியான சுயராஜ்யக் கட்சியாருக்குப் பெரிய நடுக்கம் ஏற் பட்டுப் போய்விட்டது. ஏனென்றால் கதரின் பேரைச் சொல்லிக் கொண்டு, தாங்கள் வோட்டர்களை ஏமாற் றுவது போல, பிராமணரல்லாத கட்சியினரும் அதைப் பின்பற்றி விடுவார்களோவெனப் பயந்து கொண்டு ஸ்ரீமான் சத்தியமூர்த்தியும் அவர் கோஷ்டியாரும் ஒவ்வொரு பிரசங்கத்திலும், “டாக்டர் நடேச முதலியார் அந்நிய ஆடையை அணிந்து கொண்டு கதர்ச் சாலையைத் திறந்து வைத்தார். இது பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் செய்த வேலை” யென்று ஓயாமல் பேசியும் வருகிறார்கள். எழுதியும் வருகிறார்கள்.
இப்படிச் செய்வது வெறும் விஷமப் பிரசாரமே தவிர, இதில் யோக்கியதை கொஞ்சமுமில்லை. முத லாவது, டாக்டர் நடேச முதலியார் கதர்ச் சாலையை திறந்து வைக்கும்போதே டாக்டர் வரத ராஜூலு நாயுடு ஓர் சீட்டில் நீங்களேன் கதர் உடுத்த வில்லை என்று எழுதி அவரைக் கேட்டார். அதற்குப் பதிலாய் டாக்டர் நடேச முதலியார் பேசுகையில், தான் அணிந்திருப்பது கதர்தானென்றும், தங்களுடைய கொள்கைப்படி பட்டும் உள்நாட்டு யந்திரத்தால் செய்யப்பட்ட நூலைக் கொண்டு உள்நாட்டு நெசவுக் காரர்களால் நெய்யப் பட்ட துணியும் கதர் என்று பாவிப்பதாகவும், அந்தக் கொள்கைப் படியே நான் இப்போது உள்நாட்டுப் பட்டாடைதான் அணிந்திருக்கிறேனென்றும் சொன்னார். மிதவாதிகளும் சுயராஜ்யக் கட்சியாரும் இதே கொள்கையை உடையவர்கள் தான். அதற்குக் காரணமாகத் தான் சுயராஜ்யக் கட்சியார், காங்கிரஸில்கூட கதர் ஒரு நிர்ப்பந்தமாயிருக்கக்கூடாதென்று ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். நேற்று பெல்காம் காங்கிரஸிலும், கான்பூர் காங்கிரஸிலும் ஸ்ரீமான்கள் ஏ. ரெங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி அய்யர் அவர்களும், அய்யங்கார், ஜெயகர், மூஞ்சே இவர்களும் முறையே அந்நியநாட்டு நூலும் ஜரிகையும் கொண்ட வஸ்த்திரத்தைத்தான் அணிந்து கொண்டிருந்தார்கள்.
தாங்கள் வோட் பிரச்சாரம் செய்யும் போது மாத்திரம் தங்கள் கதருக்குத் தங்கள் இஷ்டம் போல் வியாக்கியானம் செய்து கொள்ளலாம்; மற்றவர்கள் மாத்திரம் அவர்கள் உண்மையான கொள்கையைப் பின்பற்றுவதே பெரிய தப்பிதமாகக் கருதப்படுகிறது. இவ்வித சூழ்ச்சியால் பிராமணரல்லாதாரை இந்தப் பிராமணர்கள் எவ்வளவு காலத்திற்கு ஏமாற்றலாமென்றிருக்கிறார்களோ தெரியவில்லை.
– குடிஅரசு – கட்டுரை – 17.01.1926