புதுடில்லி, ஆக.14- தவறு செய்ப வர்களை கட்டியணைத்து, பாதிக்கப்பட்டவர்களை கைது செய்யும் அரசாங்கம் இது (பி.ஜே.பி.) என்று பவன் கேரா விமர்சித்துள்ளார்.
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில், அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின்போது 65 லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்களை கண்டறிந்து அவற்றை நீக்கியதாக தேர்தல் ஆணையம் கூறியது.
இந்த விவகாரத்தை நாடாளு மன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கையில் எடுத்து பர பரப்பு புகார்களை தெரிவித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவில் பெருமளவில் முறைக்கேடு நடந்து உள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருந்ததாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இதனிடையே, பீகார் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை கண்டித்து கடந்த சில தினங்களாக நாடாளு மன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் அன்றாடம் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போராட்டம் நடந்தபோது பிரியங்கா மற்றும் சில காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிந்தா தேவி என்ற பெண்ணின் நிழற்படத்தை கொண்ட டீ-சர்ட் அணிந்து போராட்டத்தில் பங்கேற்ற னர்.
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் மிந்தாதேவி, வாக்காளர் பட்டியலில் தனது வயது 124 என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டும் வகையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிந்தாதேவியின் நிழற்படத்தைப் பயன்படுத்தியது மட்டுமின்றி, அவருக்கு 124 வயதாகி விட்டதாக கிண்டல் செய்தனர். கருநாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர், வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக தனது சொந்த அரசாங்கத்தையே குற்றம் சாட்டியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தேசத்திடம் மன்னிப்பு கேட்குமா?” என்று பதிவிட்டார்.
இதற்குப் பதிலளிக்கும் வகை யில் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக தேசத்திடம் நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை. அந்தப் பெண்ணின் வயதை 124 என்று தவறாகப் பதிவு செய்துவிட்டு, அதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை. நீங்கள் செய்த தவறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த நாங்கள், மன்னிப்பு கேட்கவேண்டுமா? தவறு செய்ப வர்களைக் கட்டியணைத்து, பாதிக்கப்பட்டவர்களைக் கைது செய்யும் அரசாங்கம் இது” என்று விமர்சித்துள்ளார்.