புதுடில்லி, ஆக.14- ஆயுள் தண்டனை கைதிகள், நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகள் வரை தண்டனையை அனுபவித்து விட்டால், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் வசித்து வந்தவர் தொழிலதிபரான நிதிஷ் கட்டாரா. இவரை 2002ஆம் ஆண்டு மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று படுகொலை செய்தது. காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இந்த கொலைக்கான முழு பின்னணியும் தெரியவந்தது.
மேல்முறையீடு
அப்போது உ.பி.,யின் கேபினட் அமைச்சராக இருந்தவர் டி.பி.யாதவ். இவரது மகள் பார்தி யாதவை, தொழிலதிபரான நிதிஷ் கட்டாரா காதலித்துள்ளார். இருவரும், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், டி.பி.யாதவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில், நிதிஷ் கட்டாரா மீது ஆத்திரமடைந்த டி.பி.யாதவின் மகன் விகாஷ் யாதவ், அவரை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார். அதன்படி தன் உறவினரான விஷால் மற்றும் பெஹல்வான் என்ற சுக்தேவ் யாதவ் ஆகியோரது துணையுடன் நிதிஷ் கட்டாராவை கடத்திச் சென்று, விகாஷ் யாதவ் படுகொலை செய்தார்.
இந்த வழக்கில், முதல் குற்றவாளியான அப்போதைய கேபினட் அமைச்சர் டி.பி.யாதவின் மகன் விகாஷ் மற்றும் விஷாலுக்கு 25 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கொலைக்கு உடந்தையாக இருந்த பெஹல்வானுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தண்டனை குறைப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், மூன்று வாரங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் பெஹல்வான் மனுத் தாக்கல் செய்தார். இதனை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அப்போது 20 ஆண்டுகள் வரை தண்டனை அனுபவித்து வந்ததையும் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார் பெஹல்வான். இதையடுத்து, தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு ஜாமினில் விடுவிக்க கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு நேற்று முன்தினம் (12.8.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சட்ட விரோதம்
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
நிதிஷ் கட்டாரா கொலை வழக்கில் 20 ஆண்டுகள் வரை, தண்டனை குறைப்பு உள்ளிட்ட எந்த சலுகையும் இல்லாமல் முழுமையாக தண்டனையை அனுபவித்து விட்டதால், பெஹல்வானை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்.
கைதியின் தண்டனைக் காலம் கடந்த மார்ச் 9ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், விடுதலை செய்யாமல் மேற்கொண்டு சிறையிலேயே அடைத்து வைப்பது சட்டவிரோதமாகும். இந்த நடைமுறை தொடர்ந்தால், ஒவ்வொரு கைதியும் சிறையிலேயே உயிரிழக்க நேரிடும்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கைதி 20 ஆண்டுகள் என்ற முழு தண்டனை காலத்தையும் அனுபவித்து இருப்பதால், இனி தண்டனை குறைப்புக்கு உத்தரவிட வேண்டிய அவசியமும் இல்லை.
அதே போல், நாடு முழுதும் நிர்ணயிக்கப்பட்ட தண்டனைக் காலம் முடிந்தும் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் கைதிகள் மீது வேறு வழக்குகள் இல்லையென்றால், அவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்.
இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பவும் அறிவுறுத்துகிறோம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.