நைரோபி, ஆக.13- கென்யாவில், காது கேளாதோர் மற்றவர் களுடன் எளிதாக உரையாட உதவும் வகையில், ஒரு புதிய செயலி ஏ அய் உதவியோடு அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் உள்ளூர் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் சைகை மொழி மொழிபெயர்ப்பு செயலி இதுவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தச் செயலி, பேச் சையும் எழுத்துகளையும் சைகை மொழியாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலியின் பிரத்யேக ‘அவதார்’ (avatar) எனப்படும் உருவச் சித்திரத்திற்கு, கென்யாவின் சைகை மொழியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காது கேளாதோருக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான தொடர்புத் தடைகளை நீக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இந்தச் செயலி ஆங்கிலத்தை மட்டுமே கென்ய சைகை மொழியாக மொழிபெயர்க்கிறது. ஆனால், எதிர்காலத்தில் உள்ளூர் மொழியான சுவாஹிலியையும் (Swahili) மொழிபெயர்க்கும் ஆற்றலைப் பெறும் என்று நைரோபியில் பணிபுரியும் ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
செயலியை உருவாக்கி யவர் தனது படைப்பில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். இந்தச் செயலி ஏற்கனவே சுமார் 2,000 பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதம் இந்தச் செயலியை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.