சியோல், ஆக.13- தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணியான கிம் கியோன் ஹீ, ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவரது கணவரும் மேனாள் அதிபருமான யூன் சுக் இயோல் சிறையில் இருக்கும் நிலையில், இந்த கைது நடவடிக்கை தென் கொரிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்பதியர் சிறைவாசம்
தென் கொரிய வரலாற்றில், கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் சிறைவாசம் அனுபவிக்கும் முதல் அதிபர் தம்பதியர் இவர்கள்தான்.
திருமதி கிம் மீது பங்குகளின் மதிப்பை உயர்த்தும் மோசடி, தேர்தல் தலையீடு மற்றும் லஞ்சம் வாங்கியது உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும், தென் கொரிய கட்டுமான நிறுவனம் ஒன்று அவருக்கு 43,000 டாலர் மதிப்புள்ள பதக்கம் ஒன்றை பரிசளித்ததை அவர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேனாள் அதிபர் யூன் சுக் இயோல், பதவியில் இருந்தபோது ஊழலில் ஈடுபட்டதாகவும், அதை தணிக்கை அறிக்கைகள் வெளிப்படுத்தியபோது, அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, தேர்தல் இல்லாமல் தானே தொடர்ந்து அதிபராக இருக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த முயற்சிக்கு எதிராக மக்கள் பெரும் புரட்சியில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், இந்த ஆண்டு நடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிபர் யூன் பதவி விலகிய உடனேயே அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் தற்போது அவரது மனைவியும் கைதாகி உள்ளார். திரு யூனும், திருமதி கிம்மும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.