பாட்னா, ஆக.13 பீகார் மாநிலம் பாட்னா வில் பாபு என்ற ஒரு நாய்க்கு வசிப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் சமயத்தில் நடந்த இச்சம்பவம், அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியது.
சான்றிதழ் எண் BRCCO/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன் சில் என்றும் இந்த பகுதியில் பாபு வசித்து வருகிறார் என்றும் அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் வைரலான நிலையில் இந்த இருப்பிட சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பீகார் மாநிலம் ரோஹ் தாஸ் மாவட்டத்தில் ‘Catty Boss’, ‘Cat Kumar’ ‘Cattiya Devi’ Q எனக்குறிப்பிட்டு, பூனையொன்றுக்கு வசிப்பிடச் சான்றிதழ் கோரி இணைய வழியில் விண்ணப்பம் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உதிதா சிங், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
ஏற்கெனவே சோனாலிகா டிராக்டர்’, ‘டொனால்ட் டிரம்ப்’ பெயர்களுக்கு பீகாரில் வசிப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்கப் பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.