புதுடில்லி, ஆக.12- கீழடி அகழாய்வில் மாநில தொல் பொருள் துறையின் இறுதி அறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லை என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.
கேள்வி
தி.மு.க. மக்களவை உறுப் பினர் கனிமொழி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் மக்களவையில் கீழடி அகழாய்வு தொடர்பான சில கேள்விகளை எழுப்பினர். அதாவது கீழடி தொல்லியல் தளத்தின் அகழாய்வு அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்துக்கான காரணங்கள் என்ன? 2023-ஆம் ஆண்டு ஜனவரியில் தயாரிக்கப்பட்டு தொல்பொருள் ஆய்வு மய்யத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட கீழடி வரைவு அகழாய்வு அறிக்கையை அரசாங்கம் பெற்றதா? அதை ஏற்றுக் கொண்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?, இந்த வரைவு அறிக்கை மீது ஒன்றிய அரசால் அல்லது இந்திய தொல்பொருள் ஆய்வு மய்யத்துக்கு அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனைகள் ஏதும் எழுப்பப்பட்டதா? கீழடி குறித்த இறுதி அறிக்கையை பொதுவில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அரசு ஏதும் காலக்கெடு வைத்துள்ளதா? என்பன போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இதற்கு ஒன்றிய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நேற்று (11.8.2025) எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இறுதி அறிக்கை வெளியிடப்படவில்லை
கீழடியில் 2014-2015 மற்றும் 2015-2016 காலக்கட்டத்தில் நடைபெற்ற தொல்பொருள் அகழாய்வின் அறிக்கை 2023-ம் ஆண்டு ஜனவரியில் இந்திய தொல்பொருள் ஆய்வு மய்யத்தால் பெறப்பட்டது.
அதன் பின்னர் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிபுணர்கள் சரிபார்ப்புக்கு அந்த அறிக்கை உட்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஆய்வு அம்சங் களிலும் நேர்மை, நியாயம் மற்றும் நெறிமுறைகளை உறுதி செய்வதற்கு இந்த செயல்முறை அவசியமாகிறது. மேலும் கண்டுபிடிப்புகளின் முக் கியத்துவத்தை தாமதப்படுத்தவோ அல்லது குறைக்கவோ இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. முதல் 2 காலக்கட்டத்துக்கான அகழாய்வு அறிக்கை நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு ஆய்வு முறைமை, கால வரிசை, விளக்கம், விளக்கக் காட்சி மற்றும் பகுப்பாய்வு நுண்மை போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து முன்னணி ஆய்வாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடி தளத்தின் தொல்பொருள் திறனைக் கருத்தில் கொண்டு 2014 மற்றும் 2017-க்கு இடையில் இந்திய தொல்பொருள் ஆராய்ச் சித்துறையால் அகழாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 2018 முதல், தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை அந்த இடத்தில் தொடர்ந்து அகழாய்வு செய்து வருகிறது. இருப்பினும், மாநில தொல்பொருள் துறையின் இறுதி அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.