பெங்களூரு, ஆக.10– வாக்காளர் முறைகேட்டை கண்டித்து பெங்களூருவில் நடந்த போராட்டத்தில், எதிர்க்கட்சிகளை தேர்தல் ஆணையம் அச்சுறுத்துவதா? என ராகுல்காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் சார்பில் நமது வாக்கு, நமது உரிமை, நமது போராட்டம் – வாக்காளர் அதிகார பேரணி என்ற பெயரில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று முன்தினம் (8.8.2025) போராட்டம் நடைபெற்றது.
ராகுல்காந்தி
தலைமையில் போராட்டம்
தலைமையில் போராட்டம்
ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேலிட பொறுப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மேனாள் முதலமைச்சர் வீரப்பமொய்லி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி தனது கையில் அரசியல் சாசன புத்தகத்தை வைத்தப்படி பேச்சை தொடங்கினார். அவர் பேசும் போது கூறியதாவது:-
பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய சொல்வதா?
நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு ஒன்றிய தொகுதியில் நடந்த வாக்கு முறைகேடு பற்றி ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்தி உள்ளேன். ஒரே முகவரி உள்ள வீட்டில் 80 வாக்காளர்கள் பெயர்கள் இருந்தன. அந்த முகவரியில் போய் பார்த்தால் அந்த வீட்டில் யாருமில்லை என்பது தெரியவந்தது.
மராட்டியம் உள்ளிட்ட மாநிலங் களிலும் இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து நான் கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உறுதி மொழி அளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
நான் நாடாளுமன்றத்திற்குள் அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தி பதவி பிரமாண உறுதிமொழி எடுத்துள்ளேன். என்னிடம் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய சொல்வதா?. நான் வெளியிட்ட ஆதாரங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை நோக்கி மக்கள் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் இதற்கு பதில் சொல்லாமல் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தை மூடியுள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகாரில் இணையதளம் மூடப்பட்டுள்ளன.
அரசியல் சாசனம் மீது தாக்குதல்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சி தலைவர்கள் அரசியல் சாசனம் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். பிரதமர் மோடி வெறும் 25 தொகுதிகளில் அதிகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் டிஜிட்டல் ஆவணங்களை வழங்கினால் இன்னும் முறை கேடுகள் நடந்திருப்பதை வெளிக்கொண்டு வருவோம்.
தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறது. அவர்கள் கடந்த 10 ஆண்டுகளின் டிஜிட் டல் வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும். இதை வழங்க மறுத்தால் பா.ஜனதாவுக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறது என்று அர்த்தம். வாக்கு முறைகேட்டில் பா.ஜனதாவை பிடித்தே தீருவோம். தவறு செய்த ஒவ்வொருவரையும் பிடிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் ஆணையத்துக்கு
5 கேள்விகள்
5 கேள்விகள்
அதைத்தொடர்ந்து ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு 5 முக்கியமான கேள்விகளை எழுப்பினார். அதன் விவரம் வருமாறு:-
- எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை ஏன் வழங்கக்கூடாது? தேர்தல் ஆணையம் என்ன மறைக்கிறது?.
2.வீடியோ, கண்காணிப்பு ஆதாரங்கள் அழிக்கப்படுவது ஏன்? யாருடைய உத்தரவின் பேரில் இது நடக்கிறது?
- போலி வாக்குப்பதிவு மற்றும் வாக்காளர் பட்டியலை தவறாக பயன்படுத்துவது ஏன்?.
- தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்துவது ஏன்?
- எங்களுக்கு தெளிவாக பதில் சொல்லுங்கள், தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் ஏஜெண்டாக மாறிவிட்டதா?.
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
அதைத்தொடர்ந்து ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் எதிராக ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் முழக்கமிட்டனர்.