முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? அமைச்சர் துரைமுருகன் கேள்வி

2 Min Read

சென்னை, ஆக.9- ‘முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வாய் மூடி மவுனம் காப்பது ஏன்? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (8.8.2025) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாக்காளர் பட்டியல் திருத்தம்

பொய்களைக் கட்டவிழ்த்து ஆட்சியைப் பிடித்த பாஜக, தங்களால் வெற்றி பெறவே முடியாத மாநிலங்களில் ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கிறது.

கடந்த தேர்தல்களில் போலி வாக்காளர்களைச் சேர்த்து, அதன் மூலம் பாஜக வெற்றி பெற்றதை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களோடு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாகவே மாறிவிட்டதையே இந்தத் தேர்தல் மோசடி ஆதாரங்கள் காட் டுகின்றன.

கடந்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, அடுத்த 5 மாதங்களில் நடைபெற்ற மகாராட்டிர மாநில சட்டப் பேரவை தேர்தலில் 41 லட்சம் கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப் பட்டிருந்தனர்.

5 மாதங்களில் 41 லட்சம் பேர் எப்படி வந்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் மகாராட்டிராவில் தோற்ற பாஜக கூட்டணி, அடுத்த சட்டப் பேரவை தேர்தலில் வென்றதற்கு காரணமே போலியாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள்தான்.

இந்தச் சதியை அம்பலப்படுத்த வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட காட்சிப் பதிவுகளை ராகுல்காந்தி கேட்டபோது, அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதே பாணியில்தான் பீகார் தேர்தலிலும் சட்டப் பேரவை மோசடிகளை அரங்கேற்ற பாஜக முயல்கிறது. வாக்காளர் பட்டியலி லிருந்து பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர்கள் பல லட்சம் பேரை நீக்கியிருக்கிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் நாட்டு மக்களின் குடியுரிமையைச் சோதித்துப் பார்க்கும் நடவடிக்கையாகவே தேர்தல் ஆணையத்தின் நடவடிக் கைகள் அமைந்துள்ளன.

வேலைக்காக தற்காலிகமாக வெளியூர் சென்றவர்களை எந்த விதக் கேள்வியும் இன்றி நீக்கியுள்ளனர். அதோடு அவர்கள் வசிக்கும் மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலையும் தெரிவித் திருக்கிறது தேர்தல் ஆணையம்.

வாய்மூடி மவுனம்

எஸ்அய்ஆர் என்ற முறையற்ற வாக்காளர் திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் உடனடியாகக் கைவிட வேண்டும். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற் படுத்தும்.

தமிழ்நாட்டின் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டும் எனும் பெயரால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளது. அதே போல முறையற்ற வகையில் லட்சக்கணக்கான பிற மாநில மக்களைத் தமிழ்நாட்டில் சேர்க்கும் சதி திட்டத்தையும் பாஜக அரசு மேற்கொள்ளக் கூடும்.

இந்த விவகாரத்தில் வாய் மூடி கள்ள மவுனம் காத்து தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன்?

தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாகப் போராடி வெற்றி பெற முடியாதவர்கள், குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்டால், அது ஒரு போதும் நடக்காது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *