கலைஞர் நினைவு நாளில் ஜாதி – தீண்டாமை ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஒன்றுபட உறுதி ஏற்போம்!
ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும்!
ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும்!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
சென்னை, ஆக.7 ஆணவக் கொலைகள் போன்ற ஜாதி வெறித்தனத்திற்கு விடை கொடுக்கவேண்டும் என்றால், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரக் குழு என்பதைத் தீவிரப்படுத்தவேண்டும். அதை தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு செய்யவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞரின்
ஏழாம் ஆண்டு நினைவு நாள்!
ஏழாம் ஆண்டு நினைவு நாள்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2025) கலைஞரின் நினைவி டத்தில் தோழர்கள் புடைசூழ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். பிறகு செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம்
இன்று (7.8.2025) ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் விமர்சித்துக் கொண்ட பெரியாரின் குருகுலத்து மாணவரும், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய அரசியல் கல்வியகத்தில் முத்திரை பதித்து, நல்ல தேர்ந்த ஆளுமையாகவும், சிறந்த சிந்தனையாளராகவும், கருத்துக் கருவூலமாகவும், செம்மொழிப் போராளியாகவும் இருந்து வெற்றி பெற்றவர் கலைஞர்! அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காக முன் முயற்சி எடுத்தார்.
ஜாதி, தீ்ண்டாமை என்பது இன்னமும்கூட பேருரு எடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறது; ஆணவக் கொலைகள் மூலமாக இன்றைக்கு ஆங்காங்கே தலைதூக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதன் அஸ்திவாரத்தைத் தகர்க்கும் வகையில் தந்தை பெரியார் சொன்ன கருத்தை, அப்படியே ஏற்று சட்டமாக்கி, அந்தச் சட்டம் இன்றைக்கு நடைமுறைப்படுத்தக் கூடிய அளவிற்கு, இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய காலத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.
கலைஞர் அவர்களை வரலாறோ, அவருடைய எதிரிகளோ யாரும், என்றும் மறப்பதேயில்லை!
இந்த ஆண்டு ஏழாவது ஆண்டு நினைவு நாள் கலைஞர் அவர்களுக்கு என்றாலும், கலைஞர் அவர்களை வரலாறோ அல்லது அவருடைய எதிரிகளோ யாரும், என்றும் மறப்பதேயில்லை.
இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாளே தவிர, மற்றபடி நினைவு நாள் என்று சொல்லுவதற்குரிய இடமில்லை.
காரணம் என்னவென்றால், திராவிட இயக்கம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். இதை அசைக்கவோ, மாற்றவோ, ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும், பத்தாயிரம் மோடிகள் உருவமெடுத்தாலும், பக்தி வேஷம் போட்டாலும், அத்தனைக் கடவுள்களையும் கூட்டணியாக அமைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில், பெரியார் மண்ணை ஏமாற்றலாம், கைப்பற்றலாம் என்ற அவர்களுடைய கனவு ஒருபோதும் பலிக்காது பலிக்கவிட மாட்டோம் என்பதைத்தான் கலைஞர் அவர்களுடைய நினைவிடத்தில், அண்ணாவின் அருகில் கலைஞர் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த இடத்தில், திராவிடர் கழகத்தினர் மட்டுமல்ல, தமிழ் உணர்வு படைத்தவர்கள், சுயமரியாதை உணர்வாளர்கள், தமிழ்நாட்டின் நலனை உண்மையிலேயே காக்கக் கூடியவர்கள் அத்துணைப் பேரும் நிச்சயமாக இன்றைய சூளுரையாக ஏற்கிறார்கள். இதுதான் இன்றைய நிலை!
மிகப்பெரிய தோல்வியை இன்றைக்கு எதிரிகள் சந்தித்திருக்கின்றார்கள்
எனவே, கலைஞர் மறையவில்லை; வாழ்கிறார் – மிகச் சிறப்பான ஒவ்வொரு திட்டங்களின்மூலமும் கலைஞர் வாழ்கிறார். திட்டத்திற்கு அவர் பெயர் வைத்துத்தான் அவர் வாழுகிறார் என்பதல்ல;
தமிழ்நாட்டினுடைய வளமும், தமிழ்நாட்டினுடைய தன்மானமும், உரம் பெற்று தமிழர்களுடைய உரிமைக்கான போராட்டமும் ஓயாது. என்றும் நமக்குத் துணையிருக்கும் தந்தை பெரியார் – அண்ணா – கலைஞர் ஆகியோரின் வழியில் நடைபோடுகின்ற இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் ‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ என்ற திட்டத்தைக்கூட தடுக்கப் பார்த்து, மிகப்பெரிய தோல்வியை எதிரிகள் சந்தித்திருக்கின்றார்கள்.
மக்கள் மன்றத்தில் பெறப் போகின்ற
தோல்விக்கு அச்சாரம்!
தோல்விக்கு அச்சாரம்!
இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் அவர்கள் பெற்ற தோல்வி இருக்கிறதே, இது அடுத்து அவர்கள் மக்கள் மன்றத்தில் பெறப் போகின்ற தோல்விக்கு அச்சாரம் என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கெல்லாம் நினைவூட்டுகிறேன்.
ஆணவக் கொலைகள் என்ற பெயரால்
ஜாதி வெறி
ஜாதி வெறி
செய்தியாளர்: கிராமப்புற மாணவர்கள் மத்தியில் ஜாதிய ரீதியிலான மனப்போக்கு அதிகமாகியிருக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: ஆணவக் கொலைகள் என்ற பெயரால் சிற்சில இடங்களில் இன்னமும் ஜாதி வெறியை ஊட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு அடித்தளம் ஆர்.எஸ்.எஸ்.
ஜாதிச் சண்டைகள் எங்கே அதிகமாக இருக்கின்றது என்று சொன்னால், கோவில் திருவிழாக்களில் இருக்கிறது.
கடந்த ஜூன் 23 ஆம் தேதியன்று…
கோவில் திருவிழாக்கள் மூலமாக ஜாதி வெறியை மறைமுகமாகத் தூண்டிவிட்டு, ஜாதியைப் பாதுகாக்கின்ற சடங்கு, சம்பிரதாயங்களையெல்லாம் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், ஆணவக் கொலைகளை எதிர்க்கச் சட்டம் செய்யவேண்டும் என்பதை, திராவிடர் கழகம், கடந்த ஜூன் 23 ஆம் தேதியன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நாங்கள் நேரில் சந்தித்து, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவிற்குத் தேதி கேட்டபோது, வலியுறுத்திச் சொன்னோம். அவர்களும் அதனை ஏற்று இருக்கின்றார்.
அதேபோல, கூட்டணிக் கட்சி நண்பர்களும் நேற்று (6.8.2025) முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறார்கள்.
முதலமைச்சருக்குக் கடிதம்!
அதைத் தாண்டி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மருத்துவமனையில் நான் இருந்தபோது, முதலமைச்சர் அவர்களுக்கு விரிவாக ஒரு கடிதத்தை, எழுதி சட்டப்பூர்வமான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி, ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் எப்படி அமையவேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறேன். அவர்களும் ஒப்புக்கொண்டிருக்கின்றார்.
ஜாதி ஒழிப்பிற்கு ஒரு கூட்டணி தேவை!
எனவே, ஆணவக் கொலைகளைச் சட்டம் போட்டு மட்டுமே தடுத்துவிட முடியாது.
ஜாதிக்கு மூலம் எங்கே இருக்கிறதோ, அதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவேண்டும். எனவே, ஜாதி ஒழிப்பிற்கு ஒரு கூட்டணி தேவை!
தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பிற்காக கடுமையான பிரச்சாரமும், அதேநேரத்தில், கடுமையான நடவடிக்கைகளும் தேவை!
எப்படி சுயமரியாதைத் திருமணத்திற்கு முன்பு, நல்ல அளவிற்குப் பிரச்சாரம், அதற்குப் பிறகு சட்டம் இவையெல்லாம் வந்ததோ, அதேபோலத்தான், ஆணவக் கொலையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரக் குழு!
ஜாதி வெறித்தனத்திற்கு விடை கொடுக்கவேண்டும். அதற்காக ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரக் குழு என்பதைத் தீவிரப்படுத்தி, அதையும் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு செய்யவேண்டும்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.