நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு உறுப்பினர்கள்

6 Min Read

புதுடில்லி, ஆக.6  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகள் மற்றும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதில்களின் சுருக்கம் வருமாறு:

தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி

உப்பு உற்பத்தித் தொழிலாளர் எண்ணிக்கை யும் உதவித் தொகையை பெறும் அவர்களின் பிள்ளைகளும் எத்தனை பேர்?

நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதிக்கு ஒன்றிய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாத் அளித்த பதில் வருமாறு:

நாட்டிலேயே அதிகபட்சமாக உப்பு உற்பத்தித்தொழிலாளர்கள் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் தலா 15,500 பேர் உள்ளனர். குறைந்தபட்சமாக கருநாடகத்தில் 225 பேர் உள்ளனர். உப்புத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 2020-2021 இல் 290 பேர், 2021-2022 இல் 373, 2022-2023 இல் 623, 2024-2025 இல் 438 பேர் உதவித்தொகை பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் உறுப்பினர்
மாணிக்கம் தாகூர்

இந்தியா

ஆத்மநிர்பர் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் சிவகாசி வருமா? என்று விதி எண் 377-இன் கீழ் கேள்வி கேட்டு  விருதுநகர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசியதாவது:

சிவகாசி பட்டாசு ஆலைகள், அச்சு மற்றும் தீப்பெட்டித் தொழில் தேசிய ஏற்றுமதிகளுக்கு முதுகெலும்பாக உள்ளன. தற்போதைய சிவகாசி ரயில் நிலையத்தில் அடிப்படை நவீன உள்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகள், சீரான சரக்கு கையாளும் வசதிகள் இல்லை. அதிக பயணிகள் வருகையைப் பூர்த்தி செய்வதற்கும், தொழில்களின் தளவாடத் தேவைகளை ஆதரிப்பதற்கும் சிவகாசி ரயில் நிலையத்தை ஆத்மநிர்பர் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும்.

தி.மு.க. உறுப்பினர் அருண் நேரு

இந்தியா

உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை களை ஆதரிக்க புதிய மானிய திட்டங்கள் அறிமுகமாகுமா?

அருண் நேருவுக்கு (பெரம்பலூர், தி.மு.க.) ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பதில்: சிறிய, நடுத்தர மற்றும் பெரிய உணவு பதப்படுத்துதலுக்கான பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா (பிஎம்கேஎஸ்ஒய்) மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தி யுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (பிஎல்அய்எஸ்எஃப்பிஅய்) ஆகிய இரண்டையும் ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்துடன் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் கூடிய மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தையும் (பிஎம்எஃப்எம்இ) ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. பிஎம்கேஎஸ்ஒய் திட்டத்தை 2021-2026 ஆண்டுகளில் அமல்படுத்த ரூ.5,520 கோடி அனுமதிக்கப்பட்டது. அதன் மூலம் 1,601 திட்டங்களுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டன. பிஎல்அய்எஸ்எஃப்பிஅய் திட்டத்தை 2021-2027 ஆண்டுகளில் அமல்படுத்த ரூ.10,900 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் 170 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

தி.மு.க. உறுப்பினர்
எஸ்.ஜெகத்ரட்சகன்

இந்தியா

15 ஆவது நிதி ஆணையம் தமிழ்நாடு பஞ்சாயத்து களுக்கு வழங்கிய மானிய விவரம்?

எஸ்.ஜெகத் ரட்சகனுக்கு (அரக்கோணம், தி.மு.க.) ஒன்றிய பஞ்சா யத்து ராஜ் அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் பதில் வருமாறு:

15 ஆவது நிதி ஆணைய மானியங்களின் கீழ் 2024-2025 நிதியாண்டில் தமிழக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட மொத்த ஒதுக்கீடு ரூ.2,957 கோடி. 2025-2026இல், தமிழ்நாடு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த மானியம் ரூ.2,824 கோடி. மானிய பரிமாற்றச் சான்றிதழ், உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குத் தணிக்கை, ஆண்டுவாரி கணக்கு முடிப்பு விவரம் போன்ற கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் புதிய மானியம் மற்றும் பரிந்துரைகள் ஏதும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிகழ் நிதியாண்டில் செய்யப்படவில்லை.

தி.மு.க. உறுப்பினர்
தமிழச்சி தங்கப்பாண்டியன்

இந்தியா

தமிழ்நாட்டில் மகளிர் மீனவ குடும்பத்தலை வர்களுக்கு கிடைத்து வரும் மீன் வளத்திட்டங்கள் என்ன?

தமிழச்சி தங்கப்பாண்டி யனுக்கு (தென் சென்னை, தி.மு.க.) ஒன்றிய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதில்: 2020-2025 ஆண்டில் பிரதமர் மீனவள திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.1158.54 கோடி மொத்த திட்ட செலவில் ஒன்றிய அரசின் பங்களிப்பு ரூ.451.55 கோடி ஆகும். தமிழ்நாடு அரசு வழங்கிய தகவலின்படி மொத்த ஒன்றிய பங்கில் ரூ.258.46 கோடி பிஎம்எம்எஸ்ஒய் திட்டத்தின் கீழ் மாநிலத்தால் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடல்பாசி வளர்ப்பிற்கான ராஃப்ட்ஸ், மோனோலைன்கள் மற்றும் விதைப் பொருள்களை வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் (2020-2021 முதல் 2024-2025 வரை), தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்பட 1,83,264 மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தி.மு.க. உறுப்பினர்
கதிர் ஆனந்த்

இந்தியா

தமிழ்நாடு அரசின் உழவன் செயலி திட்டத்தை ஒன்றிய அரசும் செயல்ப டுத்துமா?

கதிர் ஆனந்துக்கு (வேலூர், தி.மு.க.) ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் பதில் வருமாறு:

தற்போது, எந்தவொரு திட்டமும் பரிசீல னையில் இல்லை. இருப்பினும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், திட்ட நடைமுறைகள், வானிலை சூழல்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதன் மூலமும், விவசாயிகளுக்கு அவர்களின் விருப்ப மொழிகளில் 1800-180-1551 என்ற கட்டணமில்லா தொலைபேசி உதவி வசதியை வழங்கும் கிசான் அழைப்பு மய்யத் திட்டத்தை நாடு முழுவதும் ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.

தி.மு.க. உறுப்பினர்
கே.இ.பிரகாஷ்

இந்தியா

ஈரோடு பகுதியில் அக்ரோடெக், பேக்டெக்  உற்பத்தி ஊக்கு விக்கப்படுமா?

கே.இ.பிரகா ஷுக்கு (ஈரோடு, தி.மு.க.) ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பதி வருமாறு:

ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ், திருப்பூர் மற்றும் ஈரோட்டிலிருந்து இரண்டு திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 12 ஆராய்ச்சித் திட்டங்களும் 2 தொடக்க நிறுவனத் திட்டங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 12 கல்வி நிறு வனங்கள் தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் கீழ் தங்கள் பாடத்திட்டத்தில் தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான பாடங்களை அறிமுகப்படுத்த ஆதரவை வழங்கியுள்ளன. ஜவுளி அமைச்சகம் நாடு முழுவதும் நிறுவியுள்ள ஜவுளி மேம்பாட்டுக்கான 8 சிறப்பு மய்யங்களில் ஒன்று கோயம்புத்தூரில் நிறுவப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. உறுப்பினர்
மு.தம்பிதுரை

இந்தியா

தரம் குறைந்த உரம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவது ஒன்றிய அரசுக்குத் தெரியுமா?

மு.தம்பி துரைக்கு (அ.தி.மு.க.) ஒன்றிய ரசாயனம், உரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் பதில் வருமாறு:

உரங்களின் தரக் கட்டுப்பாட்டை கண்காணிக்கும் பணி மாநில அரசின் வரம்புக்குள் வருகிறது. மாநிலத்தில் உரங்களின் விற்பனையை ஒழுங்காற்ற கள அளவில் விழிப்புணர்வு மற்றும் மாவட்ட தரக் கட்டுப்பாட்டு வழிமுறை உள்ளது. ஊடக அறிக்கைகள், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை மூலம் விவசாயிகளிடையே விழிப்புணர்வு தொடர்ந்து பரப்பப்படுகிறது. மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட தக வல்களின்படி, கடந்த ஓராண்டில், மாநிலங்களில் போலி அல்லது தரமற்ற உரங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. உறுப்பினர்
ஆர்.தர்மர்

இந்தியா

தமிழ்நாட்டில் ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதா?

ஆர்.தர்ம ருக்கு (அ.தி.மு.க.) நுகர்வோர் விவகாரங்கள் துறை ஒன்றிய இணை அமைச்சர் நிமுபென் ஜெயந்திபாய் பதில் வருமாறு:

‘‘ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் அனைத்து 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா பயனாளிகளையும் உள்ளடக்கியது. 2023-2024 ஆண்டில் மாநிலங்களுக்கு இடையே 37,63,678 பேரும் மாநிலத்துக்குள்ளே 3,717 பேரும் ரேஷன் கார்டுகள் சேவை பெயர்வு வசதியைப் பெற்றுள்ளனர்.

2024-2025 ஆண்டில் மாநிலங்களுக்கு இடையே 49,82,061 பேரும் மாநி லத்துக்குள்ளே 4,561 பேரும் ரேஷன் கார்டு சேவைப்பெயர்வு வசதியைப் பெற்றுள்ளனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *