கோரக்பூர், ஆக.5 கோரக்பூர் எய்ம்ஸ் அக மதிப்பீட்டுத் தேர்வுகளில் 125 மாணவர்களில் 104 பேர் தோல்வி; 83 பேர் குறைந்தது இரண்டு பாடங்களில் தோல்வி!
கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி!
கோரக்பூரில் உள்ள எய்ம்ஸில் 2024 ஆம் ஆண்டின் எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவர்களின் இரண்டாம் செமஸ்டருக்கான அக மதிப்பீட்டுத் தேர்வு களில், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் போன்ற அடிப்படை பாடங்களிலேயே அதிக மாணவர்கள் தோல்வியடைந்ததாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, உடலியலில் 94 மாணவர்களும், உயிர் வேதியியலில் 78 மாணவர்களும், உடற்கூறியல் பாடத்தில் 13 மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர். 83 மாணவர்கள் குறைந்தது இரண்டு பாடங்களில் தோல்வியடைந்துள்ளனர். சில மாணவர்கள் உடலியலில் 100–க்கு 25–க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றனர்.
நீட் தகுதித் தேர்வுக்குத் தயார் படுத்துகிறோம் என்ற பெயரில் மாணவர்களின் கற்றறிதல் திறனை மழுங்கடித்து, பந்தயத்துக்குத் தயாராகும் குதிரைகளைப் போல, நீட் தேர்வுக்கு அவர்களைத் தயாரித்ததே காரணம்! நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்று உள் நுழைந்தவர்களில் பலர், பள்ளித் தேர்வுகளில் பெருமளவு உச்ச மதிப்பெண்கள் பெறாதவர்களே என்கின்றனர் கல்வியாளர்கள்.
நீட் பள்ளிக் கல்வியை மட்டுமல்ல; மருத்துவக் கல்விக்குத் தேர்வானவர்களையும் மழுங்கடித்தே அனுப்பியுள்ளது என்பது தான் கொடுமை!
‘‘நீட் நாட்டுக்கு, வீட்டுக்கு, மாணவருக்கு, பெற்றோருக்கு, மருத்துவத்துறைக்குக் கேடு’’. இதனால் பாதிக்கப்படுவோர் நீட்டுக்கு எதிராகப் போராட முன்வருதல் அவசியம்.