மும்பை, ஆக.5 மகாராட்டிராவில் தேசிய வாத காங்கிரசைச் சேர்ந்த (சரத்பவார் காங்கிரஸ்) ஜிதேந்திர அவாட் என்பவர், ஸநாதனத்தை எதிர்த்தும், ஸநாதனத்தை எதிர்த்துப் போராடிய வட மாநில சமூக சீர்திருத்தவாதிகள்பற்றியும் விரிவாகக் கவிதை ஒன்றை மராட்டிய மொழியில் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இந்தக் கவிதையை எதிர்த்து எழுத யாரும் முன்வரவில்லை; பேச்சு மூச்சு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவாளிகள் விடுதலையை அடுத்து ‘‘ஹிந்துக்கள் அனைவரும் நல்லவர்கள், அவர்கள் தீவிரவாதிகள் அல்ல’’ என்று அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறி
யிருந்தார்.
சமூக ஊடகப் பதிவு!
இது தொடர்பாக ஹிந்துக்கள் என்பவர்கள் வேறு, கொலைக்குற்றம் செய்த ஸநாதனிகள் வேறு என்று கூறி, மராட்டிய மாநிலத்தில் கல்வா-மும்பரா சட்டமன்ற உறுப்பினர் (தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சி) ஜிதேந்திர அவாட் தனது சமூக ஊடகத்தில், ஸநாதனத்திற்கும் ஹிந்துவிற்கும் உள்ள வேறுபாடு குறித்து கவிதை வடிவில் மராட்டி மொழியில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுவரை குறிப்பாக வட இந்தியாவில் ஸநாதனத்தைப் பற்றி என்ன பேசினாலும் பெரும் பிரச்சினையைக் கிளப்பும் எந்த ஒரு ஹிந்த்துவ பாஜக பிரபலமும் அவரை விமர்சிக்க முடியாமல் அமைதியாகி விட்டனர்.
மராட்டிய மொழியில் ஜிதேந்திர அவாட் எழுதிய கவிதை வடிவிலான பதிவின் தமிழாக்கம் வருமாறு:
ஹிந்து மற்றும் ஸநாதனி இடையே உள்ள வேறுபாடு – ஒரு பார்வை
ஹிந்து மற்றும் ஸநாதனி இடையே உள்ள வேறுபாடுகளை வரலாற்றுச் சம்ப வங்களை மேற்கோள் காட்டி, ஒரு பார்வை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தின் சீர்த்திருத்தவாதி துக்காராம் மகராஜ் ஒரு ஹிந்து: மூடநம்பிக்கை மற்றும் பேஷ்வா சித்பவன் பார்ப்பனர்களின் ஜாதி வெறியை அம்பலப்படுத்தி அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்தார். ஸநாத னிகள் துக்காராம் மகராஜை தண்ணீரில் மூழ்கடித்துச் சாகடித்தனர்.
மகாராட்டிராவில் பகுத்தறிவு ஞானியார் ஞானோபா: ஒரு ஹிந்து, அவர் மராட்டியத்தில் ஸநாதனிகள் கூட்டம் பண்டாரி விட்டலா கோவில் பெயரில் மக்களின் உழைப்பைச் சுரண்டி ஏய்த்துத் தங்கள் வயிறு வளர்ப்பதைத் தனது பிரச்சாரம் மூலம் அம்பலமாக்கினார். அவரது பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியவர்கள் ஸநாதனிகள்.
உயிருடன் இருந்த ஒருவர், இறந்ததாக ஊர்வலம் நடத்திய ஸநாதனிகள்!
மராட்டியத்தில் சாமானிய மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டிய சமூக சீர்த்திருத்த வாதி ஆகார்கர்: பிறப்பால் ஹிந்து, மராட்டியத்தில் சமூகச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர். ஆனால் ஸநாதனிகள் அவர் உயிருடன் இருக்கும்போதே அவரது இறுதி ஊர்வலத்தை நடத்தினர்; இதனால் அவர் மனம் நொந்து, உடல் நலிவுற்று இறந்துபோனார்.
பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர் குரு கர்வே: அவரும் ஹிந்துதான். மறு மணங்களை ஆதரித்தார். ஸநாதனிகள் அவரது வீட்டுப் பெண்களை மிகவும் கேவலமாகக் கொச்சைப்படுத்தினார்கள்.
சத்ரபதி சிவாஜியின் நிலை!
மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி: ஒரு ஹிந்து. மராட்டியர்களின் அடையாளமாகத் திகழும் சிவாஜிக்குப் பட்டாபிஷேகம் செய்ய மறுத்தார்கள், காரணம் சிவாஜி சத்திரியர் இல்லையாம்; அவர் சூத்திரனாம்; சூத்திரனுக்குப் பட்டாபிஷேகம் செய்வது சூடான பாறையில் உட்காருவதற்குச் சமம் என்று கூறினார்கள்,
அவரை சிவாஜியின் குடும்பக் கோவிலான துல்ஜா பவானி கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுத்தனர். அதற்குக் காரணம் கூறும்போது, ராகுகாலம் துவங்கி விட்டதால் மன்னர் கோவிலுக்குள் வரக்கூடாது என்றனர். அதே நேரத்தில் அவருடன் வந்த ராம்தாஸ் சாஹோ என்பவரை அனுமதித்தனர். காரணம் அவர் பார்ப்பனராம்! (என்னே, கேவலம்!)
அவரது அரசவை தலைமை மதகுரு சிவாஜிக்குப் பட்டாபிஷேகம் செய்ய மறுத்தார். இதனை அடுத்து காசியில் இருந்து எடைக்கு எடை தங்கம் கொடுத்து, பார்ப்பனர்களை அழைத்துவந்து பட்டாபிஷேகம் செய்துகொண்டார். ஹிந்துவான சிவாஜி! மன்னரைக் கோவிலுக்குள் விட மறுத்து அவமதித்தவர்கள், பட்டாபிஷேகம் செய்ய மறுத்தவர்கள் ஸநாதனிகள்.
சாகு மகராஜ் மற்றும் பூலே!
சாகு மகாராஜா ஹிந்துவான அவர், அனைவருக்கும் சமமான வகையில் வேலை வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று கூறி, அனைத்து ஹிந்துக்களுக்கென இட ஒதுக்கீடு முறையைக் கொண்டுவந்தார். இதனால் கோபமுற்ற ஸநாதனிகள் அவரைக் கொலை செய்ய முயன்றனர். .
மகாத்மா பூலே ஹிந்து – பெண்களுக்கு கல்வி அளித்து, அவர்களுக்கு புதிய சிறகுகளைக் கொடுத்தார். ஸநாதனிகள் – அவருக்கு எதிராக கொலைகாரர்களை ஏவிவிட்டனர்.
புரட்சித்தாய் சாவித்திரி பூலே ஹிந்து, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்; மற்றும் பெண்களுக்கு என்று பள்ளிக்கூடம் திறந்தவர் மற்றவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காகத் தானே கல்வி கற்றவர்.
ஸநாதனிகள் அவரை அவமானப்படுத்தி, மலத்தையும், சாணியையும் அவர் மீது வீசினார்கள். இதற்காகவே அவர் எப்போதும் இரண்டு உடைகளை பையில் எடுத்துச்செல்வார்.
அண்ணல் அம்பேத்கர்
பாபாசாகேப் அம்பேத்கர் மராட்டியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் சாமானிய மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்.
ஆனால், அவரை இன்றுவரை இந்த ஸநாதனிகள் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் அவமானப்படுத்தி வருகின்றனர்.
– இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஸநாதனம்பற்றிப் பேசியதற்காக, அவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. தற்போது மராட்டியத்தில் இருந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்திர அவாட் ஸநாதனத்தை எதிர்த்து ஒரு நூலே எழுதியுள்ளார். அதற்கு பேச்சு, மூச்சு இல்லை. இதுவரை எந்த பாஜக அல்லது ஹிந்து அமைப்பினரும் வாயைத் திறக்கவில்லை.