சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கமும் எனது நிலையும் (1)

8 Min Read

தோழர்களே!

சுயமரியாதை இயக்கம் மிக நெருக்கடியில் இருப்பதாகவும், சீக்கிரத்தில் செத்துப் போகும் என்றும் இங்கு சொல்லப்பட்டது.

இயக்கம் ஒன்றும் நெருக்கடியில் இல்லை என்பது என் அபிப்பிராயம். சிலருக்கு அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை உத்தேசித்து அப்படித் தோன்றலாம். அதற்கு நான் காது கொடுக்க முடியாது. இந்த இயக்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு அநேகர் தங்கள் சுயநலத்துக்கு சவுகரியமில்லாது கண்டு இதுபோலவேதான் இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது, செத்துப்போய் விட்டது என்று சொல்லிக்கொண்டே போய்விட்டவர்களும், வெளியில் போய்விட்ட பின்பும் அவர்களால் கூடுமானவரை தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்களும், இருக்கிறவர்களும், திரும்பி வந்தவர்களும் பலர் உண்டு. அப்படிப்பட்டவர்களையும், அவர்களது விஷமங்களையும் பற்றி நான் சிறிதும் லட்சியம் செய்வதில்லை. அந்தப்படி நான் அலட்சியமாய் இருந்துவிட்டதால் இதுவரை இயக்கத்துக்கோ, எனக்கோ யாதொரு கெடுதியும் ஏற்பட்டுவிடவில்லை. இயக்கம் போய்விட்டது என்று இன்னமும் சொல்லிக் கொண்டுதான் திரிகிறார்கள்.

இயக்கம் எங்குப் போய்விட்டது? அவர்களை விட்டுவிட்டுப்போய் விட்டது. அவ்வளவுதான். இப்போதும் சொல்லுகிறேன் இயக்கத்தின் மூலம் சுயநலம் அனுபவிக்கக் கருதியிருக்கும் எப்படிப்பட்டவர்களுக்கும் இயக்கத்தில் இடம் கிடைக்காது. அவர்கள் யாரானாலும் சரி, இயக்க வளர்ச்சியைவிட இயக்கத்தில் சுயநலம் கருது பவர்களைக் கவனிப்பதே என் வேலை. அதனால் ஏற்படும் எதிர்ப்புகளைச் சமாளிக்கத் தயாராய் இருந்து கொண்டுதான் இப்படிச் சொல்லுகிறேன்.

எந்த இயக்கமும் அதிதீவிர கொள்கையில்லாததால் கெட்டுவிடாது. இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள் வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கம் அதனாலேயே மறைந்து போய் இருக்கிறது.

மற்றபடி யாருடைய எதிர்ப்பும், யாருடைய தொல் லையும் இருந்தாலும் இயக்கம் அதன் வேலையைச் செய்துதான் தீரும். இயக்கம் நெருக்கடியில் இருப்பதாய் இங்கு வருத்தப்பட்டவர்கள் எப்படி நெருக்கடியில் இருக்கிறது, இதனால் என்ன கெட்டுப்போய் விட்டது என்று எடுத்துக் காட்டியிருந்தால் எனக்கு அவர்கள் வார்த்தையில் உள்ள உண்மை புலப்பட்டு இருக்கும்.

தோழர்கள் தண்டபாணி, கண்ணப்பர், அய்யாமுத்து, ராமநாதன், தாவுத்ஷா முதலான பலர் சுயமரியாதை இயக்கம் செத்துப் போய் விட்டது என்று சொல்லிக் கொண்டுதான் சிலர் வெளியேறியும், சிலர் தாங்கள் இன்னமும் சுயமரியாதைக்காரர்கள் என்றும் சொல்லிக் கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்கள், சிலர் வருகிறார்கள். இதனால் எந்தக் கொள்கை கெட்டுவிட்டது? என்ன நடவடிக்கை நின்று விட்டது?

இந்த மகாநாடு கூட்டியது பைத்தியக்காரத்தனம் என்று மகாநாடு கூட்டிய பிரமுகர்களுக்குத் தோன்றும்படி இன்று காலைமுதல் இங்கு நடவடிக்கை நடக்கிறது. இது எனக்கு முன்னமேயே தெரியும். அதனாலேயே நான் இதற்கு வரவேண்டாம் என்று கருதி கடிதம்கூட எழுதிவிட்டேன். வந்தே தீர வேண்டுமென்று தந்தியும் கடிதங்களும் வந்தன. வந்த பிறகு ஏன் வந்தேன் என்றுதான் தோன்றுகின்றது. எங்கள் பெயர்களை விளம்பரம் செய்து ஆட்களைக் கூட்டி இம்மாதிரி இயக்கம் செத்துவிட்டது என்று மாய அழுகை அழுவதே மகாநாட்டின் வேலை என்றால் இனி மகாநாடுகள் கூட்டாமல் இருப்பதுகூட நலமென்றே கருதுகிறேன்.

ஏன் மாகாண மகாநாடு கூட்டவில்லை

இந்த லட்சணத்தில் மாகாணமகாநாடு ஏன் கூட்டவில்லை என்று என்மீது குறை கூறப்பட்டது. மகாநாடு இந்த லட்சணத்தில் இப்படிப்பட்ட ஆட்களை வைத்துக்கொண்டு எப்படி கூட்டமுடியும்? கூட்டுவதால் பிரயோஜனம்தான் என்ன? கூட்டாததால் என்ன கெட்டுவிடும்? இதற்குமுன் கூட்டின 3 மகாநாடுகளும் பணக்காரர்களாலும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாலும் தான் கூட்டப்பட்டது. இந்த மகாநாடும் ஒரு பணக்காரரின் பெரிய பொருளுதவியின் மீதும், ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களின் ஆதரவின் மீதும்தான் கூட்டப்பட்டது என்று காரியதரிசி சொன்னார். அப்படியிருக்க பணக்காரர்கள் தயவில் மகாநாடுகளைக் கூட்டி, அவர்கள் நிழலில் இருந்துகொண்டு அவர்கள் சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கொண்டு அவர்களையே – அக்கட்சியையே வைது கொண்டிருப்பதானால் மகாநாடு எப்படிக் கூட்ட முடியும்?

நாகையில் மாகாண மகாநாட்டைக் கூட்ட தோழர் காயாரோகணம் பிள்ளை அவர்கள் ஏற்றுக்கொண்டார். வேண்டிய ஏற்பாடும் செய்தார். முன் பணமும் கொடுத்தார். அப்படியிருக்க சில தோழர்கள் மகாநாட்டு நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டவர்களே அவரைக் கேட்காமல் மகாநாட்டுப் பந்தலில் சமதர்ம மகாநாடு கூடும் என்று பத்திரிகையில் விளம்பரம் செய்துவிட்டார்கள். பிறகு பலர் அவரைக் கேட்க ஆரம்பித்த உடன் அவர் அம்முயற்சியை விட்டு விட்டதாகத் தெரிகிறது. மற்றும் நாளையும் மகாநாடு கூட்ட வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியார் உதவியும், சில பணக்காரர்கள் உதவியும் வேண்டித்தான் இருக்கும். அப்படி இருக்க அவர்களை வைவதின் மூலம் வீரராகக் கருதி இருக்கிறவர்களின் வசவுக்குக் கட்டுப்பட்டு யார் தான் மகாநாடு கூட்டுவார்கள்? வைகின்றவர்களுக்கு யார்தான் இரயில் ஜார்ஜ் கொடுப்பார்கள்? என்பதை யோசித்துப் பாருங்கள். என்மீது குற்றம் சொல்லுவது யாருக்கும் எளிதுதான். ஆனால் இயக்கத்தில் வேறு எந்தத் தோழர் செய்கின்ற காரியத்தைவிட என் காரியம் என்ன குறைந்து போய் விட்டது என்று யோசித்துப் பாருங்கள்.

இயக்கம் என்றால் எவனோ ரயில் ஜார்ஜ் கொடுத்து, எவனோ விளம்பரம் செய்து, எவனோ கூட்டம் கூட்டி விட்டால் அதில் வந்து நின்று கொண்டு எல்லோரையும் பயங்காளி என்றும், கோழை என்றும், மந்திரிகள் மாய்கையில் மறைந்துவிட்டவன் என்றும், சர்வாதிகாரி என்றும் ஒருவர் மற்றொருவரை வைதுவிட்டுப் போய்விடுவது அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். என்ன குறைந்தாலும் மாதம் 200, 300 ரூபாய் இயக்கத்துக்காகச் சொந்தப் பொறுப்பில் செலவு செய்கிறேன். பல தடவை 1000, 2000-மொத்த செலவு செய்து வருகிறேன். மாதம் 10 பிரச்சாரங்களுக்குக் குறையாமல் பெரிதும் என் சொந்தச் செலவிலேயே பல தோழர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராய் கிராமம் கிராமமாகத் திரிந்து நோயுடனும், காயாலாவுடனும், டாக்டர்கள் அபிப்பிராயங்களை லட்சியம் செய்யாமலும் பிரசாரம் செய்கிறேன். இதற்கு மேல் மற்றவர்கள் சாதிப்பதோ மற்றவர்களுக்கு உள்ள பொறுப்போ இன்னது என்று எனக்கு விளங்கவில்லை.

இந்த இயக்கம் எந்த தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும், வீரசொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது. வீரனாவதிலும் பயன் உண்டு என்று நம்பிக்கை கிடையாது. காந்திக்கு மேல், ஒருவன் வீரனாகவோ, மகாத்மாவாகவோ விளம்பரம் பெற முடியாது. ஆனால், அவரால் மனித சமுகத்துக்கு ஒரு  காதொடிந்த ஊசி அளவு பயனும் ஏற்படவில்லை. ஏற்படப்போவதுமில்லை. வேண்டுமானால் அவருக்கும் அவர் சந்ததிக்கும் பெரிய மதிப்பு ஏற்பட்டு விடும். கோவிலும் ஏற்படும். ஆனால் நான் அப்படிப்பட்ட புகழை விரும்பவில்லை. எனக்குப் புகழ் வேண்டியதுமில்லை. புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். அத்துறையிலும் நான் இருந்து பார்த்துவிட்டுத்தான் இந்த ‘‘இழிவு’’ பெறும் வேலைக்கு மனப்பூர்த்தியாகவே வந்தேன். ஆதலால், நான் புகழ் பெறும் மார்க்கமோ, வீரப் பட்டம் பெறும் மார்க்கமோ அறியாத வனல்ல. காங்கிரசில் உழைத்தபோது எனக்கும், என் குடும்பத்துக்கும் தகுதிக்கு மேற்பட்ட புகழ் கிடைத்தது.

எந்த இயக்கமும் அதிதீவிர கொள்கையில்லாததால் கெட்டுவிடாது. இயக்கத்தைத் தனிப்பட்ட
மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கம்
அதனாலேயே மறைந்து போய் இருக்கிறது. மற்றபடி யாருடைய எதிர்ப்பும், யாருடைய தொல்லையும்
இருந்தாலும் இயக்கம் அதன் வேலையைச் செய்துதான் தீரும்.

அப்போது சில பதினாயிரக்கணக்கான ரூபாயில் புகழ் சம்பாதித்தேன். இப்போது பல பதினாயிரக் கணக்கான ரூபாய் செலவும், நஷ்டமும் அடைந்து இகழ்ச்சி அடைகிறேன். என்னவென்றால், 1922 வருஷத்திய சகல கட்சி மாகாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப்பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்சு காந்தியாருக்கு என்ன வேண்டும் என்று கேட்கும்படி ஒரு சர்வகட்சி மகாநாட்டை பம்பாயில் கூட்டி கேட்டுவரும்படி செய்தார். அதில் சங்கரன் நாயர் தலைமை வகித்து காந்தியாரை ‘‘உமக்கு என்ன வேண்டும்’’ என்று கேட்டார். அப்போது காந்தியார் எனக்கு என்ன வேண்டும் என்பதை ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளைக் கேட்டுப் பதில் சொல்லுகிறேன் என்று சொன்னார். அந்த இரண்டு பெண்மணிகள் யார்? என் மனைவியும், என் தங்கையும்தான். இது 1922ம் வருஷம் ஜனவரி மாதம் 19ஆம் தேதியிலோ, 20ஆம் தேதியிலோ இந்து பத்திரிகையில் இருந்தது. இதைத் திருச்சி டாக்டர் ராஜன் கத்தரித்து எனக்கு அனுப்பினார். இதற்கு மேல் எனக்கு இன்னும் என்ன வேண்டும்? அதனால் பயனில்லை என்று உணர்ந்தேதான் தேசத் துரோகி, மதத் துரோகி, நாஸ்திகன், கோழை, சர்க்கார்தாசன் என்கின்ற பட்டம் கிடைப்பதானாலும், நாம் செய்யும் வேலையில் மக்களுக்கு ஏதாவது நன்மை ஏற்படவேண்டுமென்று கருதி, சில திட்டங்களைக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து, அதில் என் இஷ்டப்படி உழைத்து வருகிறேன். இனியும் சாகும்வரை அந்தப் படியே உழைத்து வரத்தான் செய்வேன்.

நான் பயந்துவிட்டது

நான் இப்போது சர்க்காருக்குப் பயந்துவிட்டேன் என்றும், பொதுவுடைமைப் பிரச்சாரத்தை விட்டு விட்டேன் என்றும் குறைகூறப்பட்டது. இதைப்பற்றி விஷமப் பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சமயத்தில் எனது கருத்தை தைரியமாகவும், விளக்கமாகவும் வெளியிடுகிறேன். தயவு செய்து கவனித்துக் கேட்க வேண்டுமாய்க் கோருகிறேன்.

நான் ரஷ்யாவிற்கு போவதற்கு முன்பே பொதுவுடைமைத் தத்துவத்தை சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். ரஷ்யாவில் இருந்து வந்தவுடனும் அதை இன்னும் தீவிரமாய்ப் பிரசாரம் செய்ததும் உண்மைதான். அதோடு மாத்திரமல்லாமல் தமிழ்நாட்டில் சுமார் 150 சங்கங்கள் ஆங்காங்கு ஏற்படும்படி செய்து அவைகள் ஓர் அளவுக்கு வேலை செய்து வரும்படி செய்ததும், அவைகளுக்கு நான் சில உதவிகள் செய்து வந்ததும் உண்மைதான். ஒன்றையும் மறைக்கவில்லை. ஆனால் சர்க்காரார் பொதுவுடைமைக் கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து நமது சுயமரியாதை இயக்கத்தையே அடக்கி ஒடுக்கி ஒழித்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகும், அதனால் பல கஷ்ட நஷ்டம், தொல்லை ஆகியவை ஏற்பட்ட பிறகும், காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் அடக்கு முறைக்கு முகம் கொடுக்க முடியாமல் அவர்கள் பின்னடைந்து விட்டதைப் பார்த்தும், நம்முடைய தோழர்கள் சிலர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாலும், பலர் வெறும் வேஷ விளம்பரத்துக்கு அடிமைப்பட்டு விட்டார்கள் என்பதை உணர்ந்ததாலும் எனக்கு புத்திசாலித்தனமாக சில காரியம் செய்ய வேண்டியதாக ஏற்பட்டு விட்டது. அதுதான் பொது வுடைமைப் பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியது என்பதாகிவிட்டது.

அப்படி இல்லாமல் இருந்தால் சுயமரியாதை இயக்கம் கூட மறைந்து போயிருக்கும். இந்தப் பிரசாரம்கூட செய்ய முடியாமல் போயிருக்கும். எனக்கு இந்த 2, 3 வருஷத்தில் எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டது? தோழர் ஜீவானந்தம் எழுதிய வியாசத்தைப் பத்திரிகையில் போட்டதற்காக 2000 ரூபாய் ஜாமீன் கொடுத்தேன். கல்வியைப் பற்றி  எழுதிய ஒரு கட்டுரைக்காக நானும், என் தங்கையும் சிறைப்பட்டோம். அபராதமும், கோர்ட் செலவுமாக ரூபாய் 2000க்கு மேல் செலவாகி விட்டது. தோழர் ஜீவானந்தம் அவர்களின் மற்றொரு மொழி பெயர்ப்புக்காக என் தமையனாரும் சிறைப்பட்டார். அதற்கு  ரூ.1000 வரை செலவு ஏற்பட்டது. பல புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுயமரியாதை இயக்கப்பத்திரிகை மற்றொன்றுக்கும் ஜாமீன் கேட்கப்பட்டு நின்றுவிட்டது. இதைப் பார்த்த பல தோழர்கள் ஓடி விட்டதுடன், துரோகம் செய்யவும் ஆரம்பித்தார்கள்.

(தொடரும்)
(திருத்துறைப்பூண்டியில் 21, 22-03-1936 நாட்களில் நடைபெற்ற  தஞ்சை ஜில்லா 5ஆவது சுயமரியாதை மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு – சொற்பொழிவு – 29.03.1936

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *