ஹங்சோவ், ஆக 2- அதிசய மாக சீனாவில் 18 மாடிக் கட்டடத் திலிருந்து தவறி விழுந்த 3 வயதுச் சிறுவன் உயிர் பிழைத்துள்ளான். சீனாவில் ஹங்சோவ் நகரில்இந்த அதிசயம் நடந்தது.
சிறுவனின் பெற்றோர், அவனைத் தாத்தா பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டுச் சென்றிருந்தனர். சிறுவன் உறங்கிவிட்டதாக நினைத்த தாத்தா, பாட்டி இருவரும் மளிகைப் பொருள்கள் வாங்கக் கடைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென விழித்துக் கொண்ட சிறுவன், கழிப்பறைக்குச் சென்று அங்கிருந்த சன்னல் மீது ஏறியுள்ளான். எதிர்பாராதவிதமாக, 18ஆவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளான்.
“சிறுவன் 18ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததை முதலில் எங்களால் நம்ப முடியவில்லை,” என்று சிறுவனின் தந்தை கூறினார். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சூரிய ஒளி நேரடியாக வீட்டிற்குள் விழுவதைத் தவிர்க்க கனமான திரைச்சீலைகள் வைத்திருந்தனர். அச்சிறுவன் ஒவ்வொரு திரைச்சீலையில் மீது விழுந்து கடைசியாக கீழிருந்த மரத்தின்மீது சிறுவன் விழுந்ததால் லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பியதாக அவர் விளக்கினார்.
இவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தும் சிறுவன் உயிர் பிழைத்தது ஓர் அதிசயம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இடது கையில் முறிவு, முதுகுத்தண்டில் சுளுக்கு, மற்றும் சில சாதாரண உள்ளுறுப்புக் காயங்கள் மட்டுமே சிறுவனுக்கு ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
