‘அணுகுண்டு’ போன்ற ஆதாரம் காங்கிரசிடம் உள்ளது பா.ஜனதாவுக்காக தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுகிறது ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக.2- பா.ஜனதாவுக்காக தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுவதாகவும், இது தொடர்பாக அணுகுண்டு போன்ற ஆதாரங்கள் காங்கிரசிடம் இருப்பதாகவும் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

மக்களவையில் ராகுல்

பீகார் மாநிலத்தில் தேர்தல் – ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை கைவிடக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றன.

இந்தப் பிரச்சினையை முன்வைத்து நாள்தோறும் நாடாளுமன்றத்தை முடக்கி வரும் எதிர்க்கட்சியினர். இது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் நேற்றும் (1.8.2025) இந்த விவகாரத்தை மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடுமையாக எழுப்பின.

அப்போது எதிர்க்கட்சித் தலை வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பேசியதாவது:-

வாக்கு திருட்டு நடந்து வருவதாக நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். இப்போது தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுவதற்கான முழுமையான மற்றும் வெளிப்படையான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

இதை நான் மேம்போக்காக கூறவில்லை. 100 சதவீத ஆதாரத்துடன் கூறுகிறேன். அதை நாங்கள் வெளியிட்டதும், பா.ஜனதாவுக்காக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதை மொத்த நாடும் அறிந்து கொள்ளும்.

மத்தியப் பிரதேச தேர்தலில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எங்கள் கட்சி சந்தேகம் அடைந்தது பின்னர் கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தல், அதைத்தொடர்ந்து மராட்டிய தேர்தலிலும் இது நடந்திருக்கிறது.

அணுகுண்டை கண்டோம்

மராட்டியத்தில் வாக்குத் திருட்டு நடந்ததை நாங்கள் நம்புகிறோம். வாக்காளர் பட்டியல் திருத்தம் நடந்து கோடிக்கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர் தேர்தல் ஆணையம் உதவவில்லை என்பதால், இதை ஆழமாக ஆராய் முடிவு செய்தோம்.

நாங்கள் சொந்தமாக ஆய்வு நடத்தினோம். அதற்கு 6 மாதங்கள் ஆனது. அப்போது ‘அணு குண்டு’ ஒன்றை கண்டுபிடித்தோம். அது வெடிக்கும்போது, நாட்டில் ஒளிந்து கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு இடம் இருக்காது.

தப்ப முடியாது

தேர்தல் ஆணையத்தின் மேல் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை பணியாற்றும் யாரும் தப்ப முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்கள் எல்லாரும் இந்தியாவுக்கு எதிராக பணியாற்றுகிறீர்கள்.

இது துரோகம், அதை விடக் குறைவானது எதுவுமில்லை. நீங்கள் ஓய்வு பெற்றிருக்கலாம், நீங்கள் எங்கும் இருக்கலாம். நாங்கள் உங்களைக் கண்டு பிடிப்போம்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *