வயநாடு, ஆக. 1- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒன்றிய அரசு வழங்கிய நிதி போதுமானதாக இல்லை என்பதால், பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவின் வயநாட்டில் 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், பேரிடர் ஏற்பட்டு ஓராண்டு கடந்த பின்னரும் அதிலிருந்து முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, ஒன்றிய அரசு வழங்கிய நிதி போதுமானதாக இல்லை என்பதால், பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
வயநாடு தொகுதி மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொண்ட பிரியங்கா, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு களால் ஏராளமானோர் தங்கள் வீடுகளையும், விவசாய நிலங்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டினார். பேரிடரின் தாக்கம் இன்னும் அப்பகுதி மக்களைப் பாதித்து வருவதாகவும், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குப் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பிற மக்களின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது அவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்து, வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.