ராஜராஜன் மீது பிரதமருக்கு அப்படி என்ன திடீர் காதல்? மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்?

6 Min Read

“தேர்தல் நெருங்கிவிட்டால் சின்ராசுவைக் கையிலேயே பிடிக்க முடியாது!” என்பது இந்தியாவில் எல்லோருக்குமே தெரியும். எந்த ஊரில் ஆட்டமோ, அந்த ஊருக்கேற்ற வேடமிட்டு, உடையணிந்து, சலங்கை கட்டி ஆடுவதில் சமகாலத்தில் யாரும் போட்டியாளர் இல்லை. திடீர் திடீரென்று அவருக்கு அந்தந்த ஊர் பாசம் வந்து, ‘நமக்கும் மேல கூவுவது’ யார் என்று எல்லோரையும் வியக்க வைப்பவர் அவர். ‘சின்ராசு’ யாரென்று உங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.

அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவிருப்பதால், இப்போதே அதற்கான ஆயத்தப் பணிகளைத் தீவிரமாகத் தொடங்குகிறார்கள் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிய வந்தது. மற்றவற்றை விடுவோம். தமிழ் மீதும், தமிழர் பெருமை மீதும் அவருக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ள அக்கறை (!?) இருக்கிறதே! அப்பப்பா… சொல்லி மாளாது!

திடீரென்று திருவள்ளுவரைத் தேடி ஒருவர் ஓடி வந்தார். காசி மாநகரில் வள்ளுவர் சிலையை வைத்தே தீருவேன் என்று சூளுரைத்தார். அந்த நேரத்தில் இங்கிருந்த நாகசாமிகளும், திருவள்ளுவர் வேதத்திலிருந்து சாறு பிழிந்து குறளை எழுதினார் என்று சரடு விட்டார்கள். பட்டையும் கொட்டையும் அணிவித்து, திருவள்ளுவருக்குச் ‘சுத்தி’ செய்யத் தொடங்கிவிட்டார்கள் சங் பரிவாரத்தினர்.

எங்கும் ஒரே களேபரம்!  ‘தமிழர்களைக் கவர வேண்டுமானால் தமிழர்களின் மொழி, இனம் மீதான பற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில் பா.ஜ.க. தீவிரமாகிவிட்டது. இனிமேல் அவ்வளவு தான்!’ என்றார்கள்.

சிறப்புக் கட்டுரை

வந்து போகும் திடீர் பாசம்!

இதையெல்லாம் வெறும் ஓட்டு அரசியல் நோக்கில் அவர்களால் செய்துவிட முடியுமா? தமிழர் பண்பாடு, அடையாளம் எல்லாமே ஆரியத்திற்கு எதிரானதாயிற்றே! ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன வள்ளுவனை, பிறப்பின் அடிப்படையில் தான் வர்ணம், ஜாதி என்று வர்ணாசிமரமத்தைப் பிடித்துத் தொங்கும் வடக்கிலிருப்போரால் ஏற்க முடியுமா? ‘வாரணாசியின் மய்யத்தில் வர்ணாசிரமத்தின் வைரிக்குச் சிலையா? ஏற்கமுடியாது’ என்று சுருட்டி குப்பை ேமட்டு மூலையில் போட்டுவிட்ட்டார்கள் வள்ளுவர் சிலையை! தருண் விஜய்களின் திடீர் விஜயங்கள் பயனற்றுப் போயின!

பிறகும், அவ்வப்போது இத்தகைய முயற்சிகள் தொடர்கின்றன. அகத்தியரைத் தூக்கி வருவது, தமிழ்ச் சங்கமம் என்று ‘சங்கிமம்’ நடத்துவது என்று தோல்விப் படமாக எடுத்துத் தள்ளுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின்
திராவிடர் பண்பாட்டு ஒவ்வாமை

தமிழர்களின் மொழியை, திராவிடர்களின் பண்பாட்டைப் பேசுவது என்பது, ஆதிக்கத்துக்கு எதிராகப் பேசுவது! அது ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு வராது! அவர்களால் இதை ஏற்கவும் முடியாது. புலி வேஷம் போட்டு வேடிக்கை காட்ட முயன்றால் வேடம் கலைந்து அசிங்கப்படுவது தான் அவர்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது.

இந்த வரிசையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ராஜேந்திர சோழனைக் கையில்  எடுக்க முயன்றனர். அப்போது அது செல்லுபடியாகாமல் போகவே, இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்குத் திடீரென்று சோழர்கள் மேல் பாசம் வந்து, ஆடித் திருவாதிரை என்ற பெயரில் கங்கை கொண்ட சோழபுரத்திற்குப் படையெடுத்துள்ளனர்.

காவிரிக் கரையிலிருந்து படையெடுத்துப் போய் வடக்கை வெற்றி கொண்ட வரலாறு தான் கங்கை கொண்டானின் வரலாறு! அந்தப் பெயரை இப்போது பயன்படுத்தி, அங்கிருந்து தமிழ்நாட்டை வெற்றிகொள்ள முடியுமா என்று ஆசைப்படுகிறார்கள் அற்பர்கள். கடற்படை கட்டி, கடாரம் வரை வென்றவன் ராஜேந்திர சோழன்! அவையெல்லாம் காலங் காலமாக வடக்கு வாசிகளால் கண்டுகொள்ளப்படாத தமிழ்நாட்டின் சிறப்புகள், வரலாறுகள்! ‘இப்போதென்ன திடீர் அக்கறை, அதுவும் ராஜேந்திர சோழன் மீது?’ என்றால், அதில் அந்த மன்னர்களின் பார்ப்பனப் பாசமும் அடங்கியிருக்கிறது என்பது தான் பின்னணி!

ராஜராஜனையும், ராஜேந்திர சோழனையும் போற்றிச் சிலை எடுக்கவிருப்பதாக நரேந்திர மோடிக்கு இந்தப் பேச்சை எழுதிக் கொடுத்தவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஏன், இன்றைய இந்தியப் பிரதமர் – அன்றைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியாருக்குக் கூட மறந்து போயிருக்கலாம். நினைவூட்டுவது நம் கடமையல்லவா?

ராஜராஜன் சிலையை மீட்க கலைஞரின் முயற்சி

15 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் ஒரு முன்னெடுப்பை மேற்கொள்கிறார். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் இருந்து களவாடப்பட்டு   குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேசன், காலிகோ அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்த  முதலாம் ராஜராஜன், அவனது மனைவி உலகமாதேவி ஆகியோரின் வெண்கலச் சிலைகளைத்  தஞ்சை பெருவுடையார் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா நடைபெறும் காலத்தில், மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது அம் முயற்சியின் நோக்கம்.

70 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கோயிலின் உயர் நிலை நிர்வாகிகள் சிலரால் திருடப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்துக்கு அருகில் உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலச்சாரி என்பவர் மூலம், சென்னையில் கவுதம் சாராபாய்க்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டவை அந்தச் சிலைகள்.

கண்டு கொள்ளாத குஜராத் முதலமைச்சர் மோடி

அவற்றை மீட்க வேண்டும் என்பதற்காகத் தான் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று அன்றைய தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழுவினர் அன்றைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து, அவருக்கு தஞ்சாவூர் தட்டினையும் பரிசளித்து, வேண்டுகோளையும் வைத்தனர்.  ஆனால், அப்போது ராஜராஜ சோழனின் சிலையைத் திருப்பித் தமிழ்நாட்டுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை  பிறகு தமிழ்நாடு காவல் துறை சிலை கடத்தல் பிரிவின் நடவடிக்கைகள் தீவிரமடைந்த காலத்தில் 2018-ஆம் ஆண்டு அச் சிலைகள் மீட்டு தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன.

ஞாபக மறதியோ?

தான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, 2010-ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகள் பிரதமராகிவிட்ட நரேந்திரமோடிக்கு மறந்துபோயிருக்கும் தானே! இதில் மட்டுமா, ஆதார், நீட் என்று எதையெல்லாம் முதலமைச்சராக இருக்கும் போது எதிர்த்தாரோ, அவற்றைத் தான் பிரதமரானதற்குப் பிறகு கண்டிப்பாக அமல்படுத்தும் அளவுக்கு அவருக்கு ஞாபக மறதி உண்டே!

தஞ்சை கோயில் வாசலில் ராஜராஜன் சிலை ஏன்?

ராஜராஜ சோழனுக்குச் சிறப்புச் செய்ய அப்போது மட்டுமா கலைஞர் முயன்றார்? 1972-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் நாள் அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் தலைமையில், முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறக்கப்பட்ட சிலை இன்றும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் வாசலில் இருக்கிறதே! பார்த்திருக்கிறார்களா இவர்கள்?

அது ஏன், கோவிலுக்குள்ளேயே வைத்திருக்கலாமே! கலைஞர் அதற்குத் தான் முயன்றார்! தஞ்சை பெரிய கோவில் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் புதிய சிலைகள் எதுவும் வைக்கப்படக் கூடாது என்று அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் தான் கோவிலின் வாசலில் அமைக்கப்பட்டது ராஜராஜச் சோழன் சிலை!

‘கோவில் கட்டியவர்களுக்கு இது தான் கதி!’ என்று சொல்லிக் காட்டும் வகையில் தான் ராஜராஜனுக்கு இந்த நிலை நேர்ந்துள்ளதாக நமது தலைவர் ஆசிரியர் பொதுக்கூட்டங்களில் அடிக்கடி எடுத்துக்காட்டுவதுண்டு.

மாமன்னன் கரிகாலன் விழா – தொடரும் திராவிடர் கழகத்தின் மாநாடுகள்!

ஆனால், திராவிடர் கழகம் எப்போதும் போற்றி எடுத்துக்காட்டும் மன்னன், கரிகால் பெருவளத்தான்! காரணம் என்ன? இன்றும் வியக்கத் தக்க வகையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே, கற்களால் காவிரிக்குக் கரை கட்டி, வேளாண்மைக்கு வழிவகுத்த அறிவியல் பார்வையும், மக்கள் நோக்கும் மிகுந்த மாமன்னன்!

திராவிடர் கழகம் கரிகாலனைக் கொண்டாடுவது இப்பொழுதுதான் தினமலர் திரிப்பாளர்களின் கண்களுக்குத் தெரிகிறது போலும்! இதே பகுதியில் திருக்காட்டுப்பள்ளியில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் 16.12.2017இல் மிகச் சிறப்பாக விழா எடுத்துக் கொண்டாடியது திராவிடர் கழகம் தான்! மாமன்னன் கரிகாலனை எங்கும் முன்னிறுத்தி, போற்றுவது திராவிடர் கழகத்தின் வழமை! உலகமே போற்றுகிறதே! இந்தியாவில்  ஈராயிரம் ஆண்டுகளாக இன்றும் தொடரும் ஒரே அணை என்னும் சிறப்புக்குரிய கல்லணையை உருவாக்கிய தமிழர் அறிவு வரலாற்றின் அடையாளம் அல்லவா கரிகாலன்?

திராவிடர் கழகத்திற்குக் கரிகாலன் மீதிருப்பது இனப்பற்று! மோடிக்கு ராஜேந்திர சோழன் மீதிருப்பது ஓட்டுப்பற்று!

எது வெல்லும்? பார்ப்போம்!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *