புதுடில்லி, ஜூலை 29- ஆபரேஷன் சிந்தூரின் போது எத்தனை இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டன? பிரதமர் மோடி யாரிடம் சரணடைந்தார்? என மக்களவையில் காங்கிரஸ் கட்சி அடுக் கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.
சிறப்பு விவாதம்
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதைத்தொடர்ந்து தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (28.7.2025) சிறப்பு விவாதம் நடந்தது.
இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உரி, புல்வாமாவில் தாக்குதல் நடந்தது முதலே பிரதமர் மோடி, ‘நாங்கள் வீட்டுக் குள் நுழைந்து கொன்றோம்’ ‘பயங்கரவாத கட்டமைப்புகளை அழித்தோம்’ என கூறி வருகிறார். அதே கருத்தைத்தான் தற்போதும் கூறுகிறார். உங்கள் ஆட்சியில்தான் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
யாருக்குமுன் மண்டியிட்டீர்கள்?
‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடி யவில்லை எனவும், பாகிஸ்தான் மீண்டும் தாக்கும் எனவும் கூறப்படுகிறது. அப்படி யென்றால் இது எப்படி வெற்றி ஆகும்?
போர் செய்வது எங்கள் நோக்கம் இல்லை என அவர்கள் (அரசு) கூறுகிறார்கள். அப்படி ஏன் இல்லை? எந்த பிராந்தியத்தையும் எடுக்கவில்லை என்கிறார்கள். ஏன் அப்படி செய்யவில்லை?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எப்போது நாம் திரும்ப எடுக்கப் போகிறோம்? இப்போது இல்லை என்றால், எப்போது?
பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட தயாராக இருந்தது என்றால், ஏன் நீங்கள் நிறுத்தினீர்கள்? யாருக்கு முன்பு நீங்கள் மண்டியிட்டீர்கள்? என்பதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும்.
மிகப் பெரிய இழப்பாகும்
வர்த்தகத்தை காட்டி மிரட்டி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான தாக்குதலை நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 26 முறை கூறியிருக்கிறார்.
இந்தியாவின் 5 முதல் 6 போர் விமானங்கள் வரை சுட்டு வீழ்த்தப் பட்டதாக அவர் கூறியுள்ளார். ஒரு விமானத்தின் விலை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்டது. இந்தியாவில் 35 ரபேல் விமானங்கள் உள்ளன. அதில் சில விமானங்கள் வீழ்த்தப்பட்டால், அது மிகப்பெரிய இழப்பாகும்.
பயங்கரவாதிகள் எப்படி வந்தனர்?
இந்த விவாதத்தின்போது சீனாவின் பெயரை ராணுவ அமைச்சர் ஏன் கூற வில்லை? ‘ஆபரேஷன் சிந்தூரின்’போது சீனா பாகிஸ்தானுக்கு எவ்வளவு உதவி செய்தது? என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.
ராணுவ அமைச்சர் தனது உரையில் ஏராளமான தகவல்களை தெரிவித்தார். ஆனால் பஹல்காமுக்கு பயங்கரவாதிகள் எப்படி வந்தனர்? என்பதை அவர் கூறவில்லை.
தேசம் இதை அறிய விரும்புகிறது. ஏனெனில் சம்பவம் நடந்து 100 நாட்களுக்கு மேல் கடந்து விட்டது. ஆனால் இந்த அரசு அந்த பயங்கரவாதிகளை இதுவரை நீதிக்கு முன்பு நிறுத்தவில்லை.
உள்துறை அமைச்சர் பொறுப்பு
பயங்கரவாதத்தின் முதுகெலும்பை உடைத்து விட்டதாக உள்துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால் உரி, பாலாகோட், பஹல்காம் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
இதற்கு யார் பொறுப்பேற்பது, காஷ்மீர் துணை நிலை ஆளுநரா? உள்துறை அமைச்சரே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். துணைநிலை ஆளுநருக்கு பின்னால் நீங்கள் ஒளிய முடியாது.
பஹல்காம் தாக்குதலுக்கு சுற்றுலா நடத்துபவர்களைக் கூட குற்றம் சாட்டும் அளவுக்கு இந்த அரசு மிகவும் கோழைத் தனமானது, மிகவும் பலவீனமானது,
இவ்வாறு கவுரவ் கோகாய் பேசினார்.