புதுடில்லி, ஜூலை 28- மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: உலகம் முழுவதும் பல்வேறு நாட்டில் உள்ள சிறைகளில் 10,574 இந்தியர்கள் உள்ளனர்.
அமீரக நாட்டில்…
அதிகபட்சமாக அய்க்கிய அரபு அமீரக நாட்டில் 2,773 இந்தியர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் 2,379 இந்தியர்களும், நேபாளத்தில் 1,357 இந்தியர்களும், கத்தாரில் 795 இந்தியர்களும். மலேசியாவில் 380 இந்தியர்களும், குவைத்தில் 342 இந்தியர்களும், பிரிட்டனில் 323 இந்தியர்களும், பஹ்ரைனில் 261 இந்தியர்களும், பாகிஸ்தானில் 246 இந்தியர்களும் உள்ளனர்.
மீனவர்கள்
மேலும், 43 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக அய்க்கிய அரபு அமீரக நாட்டில் 21 இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் பொது மன்னிப்பு கேட்பதற்கான உதவிகளை இந்தியத் தூதரகங்களின் வாயிலாக செய்து வருகிறோம். இலங்கை சிறைகளில் உள்ள 27 தமிழ்நாடு மீனவர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மீனவர் என மொத்தம் 28 பேரை மீட்பதற்கான முயற்சியிலும் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள்
ஆக.4ஆம் தேதி தொடங்குகிறது
சென்னை. ஜூலை 28- தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கலைத் திருவிழா
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த கல்வி ஆண்டிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
1, 2ஆம் வகுப்புகள், 3, 4, 5ஆம் வகுப்புகள், 6, 7, 8ஆம் வகுப்புகள், 9, 10ஆம் வகுப்புகள், 11, 12ஆம் வகுப்புகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ‘பசுமையும், பாரம்பரியமும்’ என்ற கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும். கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்பித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணல் சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பலகுரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீபோர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்படும்.
முதல்கட்டமாக, பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து, குறுவட்ட அளவில் (ஆக.25 முதல் 29), வட்டார அளவில் (அக். 13 முதல் 17), மாவட்ட அளவில் (அக்.27 முதல் 31), மாநில அளவில் (நவ.24 முதல் 28) போட்டிகள் நடைபெறும்.
வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படும். மேலும், தரவரிசையில் முதன்மை இடம் பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தண்டனைக்கு எதிரான வழக்கில் காலதாமதம் செய்வது ஏன்?
உச்சநீதிமன்றம் கேள்வி
ராஞ்சி, ஜுலை 28- தண்டனைக்கு எதிரான வழக்கில் முடிவு எடுக்காமல், பல ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் புகார் செய்த பின், ஒரு வாரத்திலேயே, 10 குற்றவாளிகள் மீதான வழக்குகளில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஜார்க்கண்டில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் உட்பட பலர், உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், ‘தண்டனைக்கு எதிரான வழக்கில், பல ஆண்டுகளாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. விரைவில் முடிவு எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, கடந்த ஜூலை 14இல் விசாரணைக்கு வந்த போது, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் மற்றும் மாநில அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பவுசியா ஷகில், தண்டனைக்கு எதிரான வழக்குகளில், வெவ்வேறு தேதிகளில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறினார். இந்த விவரங்களை பதிவு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது போன்ற வழக்குகளில் விரைந்து முடிவெடுக்கும்படி புதிதாக நியமிக்கப்பட்ட ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதி பதிக்கு அறிவுறுத்தினர்.
மேலும், தீர்ப்புக்காக பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை அளிக்கும்படி, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை செப்., 22க்கு ஒத்தி வைத்தனர்.