சென்னை, ஜூலை 26- ”குழந்தை பிறப்பு விகிதம், பல மாநிலங்களில் குறைந்துள்ளது; தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில், இது, 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது,” என விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேசினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை சார்பில், 166ஆவது வருமான வரித்துறை ஆண்டு விழா, சென்னையில் 24.7.2025 அன்று நடந்தது. சிறப்பு விருந்தினராக, உலக சுகாதார நிறுவனத்தின் மேனாள் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பங்கேற்றார். புதிய உலகத்தில், நாம் பல்வேறு பரிமாணங்களில் முன்னேற்றங்களை கண்டிருக்கிறோம். 1947இல், மனிதனின் சராசரி ஆயுள் காலம், 34 வயதாக இருந்த நிலையில், இப்போது, 72 ஆக உள்ளது.
நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதங்கள் பல மாநிலங்களில் குறைந்துள்ளன; தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில், இது, 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இது ஒரு வகையில் நன்மையாகவே பார்க்கப்படுகிறது, ஏனெனில், இந்திய மக்கள் தொகை, 140 கோடிக்கும் மேலாகி விட்ட நிலையில், 2060க்குப் பின், அதில் சீரான குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் தலைமுறையினரிடம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் அதிகமாகி உள்ளன. உடற்பயிற்சி இல்லாதது மற்றும் நகர்ப்புற வாழ்வியல் மாறுதல்களும் காரணமாக இருக்கலாம். ஒவ்வொருவரும் வாரத்திற்கு குறைந்தது, 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் ப்ரீத்தி கார்க் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.