நேற்று மாநிலங்களவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்தின்போது சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “அரசமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சார்பின்மை ஆகிய சொற்களை நீக்குவது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்னவெனில், அச்சொற்களை நீக்குவதற்கான எந்தவொரு திட்டமும் உள்நோக்கமும் இப்போதைக்கு இல்லை. அத்தகைய சட்ட திருத்தங்கள் மேற் கொள்வது குறித்து ஆலோசனைகள் ஏதேனும் நடத்தப்படுவதாயின், ஒருமித்த கருத்துடன் பொதுவெளியில் மேற்கொள்ளப்படும். இப்போதைக்கு அரசு இது தொடர்பான எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி காலி பணியிடங்கள்
மாநிலங்களவை கேள்வி நேரத்தில், ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் கூறியதாவது:- நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 371 நீதிபதி பணி யிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 193 நீதிபதிகள் பணியி டங்களை நிரப்ப உயர்நீதிமன்ற கொலீஜியங்கள் இன்னும் தங்கள் பரிந்துரைகளை அனுப்பவில்லை. இவ்வாறு அவர் கூறினர்.
ஆசிரியர் காலிப் பணியிடங்கள்
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி கூறியதாவது:- தற்போதைய நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 7 ஆயிரத்து 765 ஆசிரியர் பணியிடங் களும், நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 4 ஆயிரத்து 323 ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கல்விப்பணி பாதிக்காமல் இருப்பதற்காக ஒப்பந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் விதிமுறையும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஓய்வு பெற்ற 6 தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைப் பதிவு விவரம்
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த முகமது அப்துல்லா, சண்முகம், பி. வில்சன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. இதனால் நேற்று மாநிலங்களவை சுமுகமாக நடந்தது.
இதில் வைகோ உள்ளிட்டோர் தங்கள் அனுபவங்கள் குறித்து உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து அவர்களின் பங்களிப்பு தொடர்பாக பிற மாநிலங்களவை உறுப்பினர்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். ஓய்வுபெற்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய தேர்வு
மேலும் தி.மு.க.வைச் சேர்ந்த கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த இன்பதுரை, தனபால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் மாநிலங்களவையில் இன்று (25.7.2025) பதவியேற்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுடன் ஓய்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகைப் பதிவு விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி மொத்த அலுவல் நாட்களான 315 நாட்களில், பி. வில்சன் 300 நாட்களும் (95.24 சதவீதம்), சண்முகம் 280 நாட்களும் (88.89 சதவீதம்), சந்திரசேகரன் 217 நாட்களும் (68.89 சதவீதம்) வருகை தந்துள்ளனர்.
மேலும் வைகோ 178 நாட்களும் (56.51 சதவீதம்), அன்புமணி ராமதாஸ் 92 நாட்களும் (29.21 சதவீதம்) வருகை தந்துள்ளனர். முகமது அப்துல்லா 212 அலுவல் நாட்களில் 191 நாட்கள் (90.09 சதவீதம்) வருகை தந்துள்ளார்.