தேர்தல் ஆணையத்தின் ‘மாபெரும் மோசடியை’ அம்பலப்படுத்துவோம் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

2 Min Read

புதுடில்லி, ஜூலை 24- தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய “மோசடியைக்” கண்டறிந்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

விதிகளையே மாற்றி…

ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளில் கூறியதாவது: “இது பீகார் தொடர்பானது மட்டுமல்ல, மகாராஷ்டிராவிலும் அவர்கள் மோசடி செய்தார்கள்.” “நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலையும், காட்சிப்பதிவுகளையும் கேட்டோம். ஆனால் எங்களுக்குத் தரவே இல்லை.

அதற்காக அரசு விதியையே மாற்றி, வீடியோக்களைக் கொடுக்காமல் பார்த்துக் கொண்டது. மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன், ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள். கர்நாடகாவிலும் நாங்கள் ஆழமான ஆய்வு செய்தோம். மிகப்பெரிய மோசடி அங்கே வெளிச்சத்திற்கு வந்தது.

என்ன மோசடி நடந்தது என்பதையும், எங்கே நடந்தது என்பதையும் முழுமையாக, ஆதாரங்களுடன் காட்ட முடியும். நான் உங்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் காட்டத் தயார் பா.ஜ.க.வின் நாடகத்தை நாங்கள் புரிந்துகொண்டுவிட்டோம்.

மோசடி கண்டுபிடிப்பு

கர்நாடகாவில் ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்து, ஆறு மாதங்களாக முழு மையாக ஆய்வு செய்தோம். அதிலேயே இவர்கள் எப்படி தேர்தலை திருடுகிறார்கள் என்ற முழு மோசடிகளையும் கண்டு பிடித்தோம். புதிய வாக்காளர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்? யார் உண்மையில் வாக்கு செலுத்துகிறார்கள்? எங்கிருந்து அந்த வாக்குகள் போடப் படுகின்றன? இப்போது அவர்களுடைய முழு திருட்டுத்தனமும் எங்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர்களும் அதையும் உணர்ந்துவிட்டார்கள். அதனால்தான் இப்போது பீகாரில் அந்த முறையையே மாற்றி, ஆனால் ஒரு புதிய வடிவில் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். தற்போது அவர்கள் வாக்காளர்களையே நீக்கிவிட்டு, தங்களுக்கேற்ற முறையில் புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கப் போகிறார்கள்.

பீகாரில் 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினால் பதில் இல்லை. இந்தியாவில் தேர்தல்கள் திருடப்படுகின்றன. இதுதான் நம் ஜனநாயகத்தின் கடுமையான உண்மை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தியின் இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் கூறியுள்ள ஆதாரங்களை வெளியிடும் பட்சத்தில், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்தும், வரவிருக்கும் தேர்தல்கள் குறித்தும் விவாதங்கள் எழக்கூடும்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதலே மின்னணு இயந்திரங்கள் மீதும், வாக்காளர் பட்டியல் மீதும் தொடர்ந்து சந்தேகம் எழுப்பப்பட்டே வருகிறது. தற்போது ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையம் சிக்கியிருப்பதாக, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரே குற்றம் சுமத்தியிருப்பதும் அந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *