புதுடில்லி, ஜூலை 23 பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அங்கு ஆயத்த பணிகளில் ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.அய்.ஆர்.) உட்படுத்துகிறது.
இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந்த முயற்சி, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்களிக்கும் உரிமைகளை பறிக்கும் முயற்சி என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நடவடிக்கையை நிறுத்தக்கோரி பீகாரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் நாடாளுமன்ற வளாகத்திலும் நேற்று (22.7.2025) இதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தின் மகர வாயிலில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினார்கள். பதாகைகளையும் கையில் ஏந்தி இருந்தனர்.
இந்த போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரியங்காகாந்தி, கே.சி. வேணுகோபால், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர். பாலு, ஆராசா,சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிசா பார்தி, மனோஜ் குமார் ஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.