ஆரெகன், ஜூலை 23- அமெரிக்காவின் ஆரெகன் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற டில்லன் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவரைக் காணவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 19.7.2025 அன்று மதிய வேளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீர்வீழ்ச்சியில் விழுந்த மற்ற மூவர் டெஸ்சுட்ஸ் (Deschutes) ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மீட்புக்குழுவினர் உடனடியாகப் பகுதிக்கு விரைந்து ஆளில்லா வானூர்திகள் (drones) உதவியுடன் தேடல் பணியைத் தொடங்கினர். சனிக்கிழமை இரவு நிறுத்தப்பட்ட தேடுதல் பணி, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
சுமார் 4.5 மீட்டர் (15 அடி) உயரமுடைய டில்லன் நீர்வீழ்ச்சி, கோடைக்காலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு பிரபலமான இடமாகும். இங்குப் பலர் படகு சவாரியும் மேற்கொள்வது வழக்கம். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.