பெங்களூரு, ஜூலை.22- அரசியல் பிரச்சினைகளுக்காக அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது? என கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவிக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
நில முறைகேடு வழக்கு
கருநாடக காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதலமைச்சராக உள்ளார். இவரது மனைவி பார்வதியின் குறைந்த நிலமதிப்புடைய 3.16 ஏக்கர் நிலத்திற்குப் பதிலாக பல கோடி மதிப்புடைய 14 வீட்டு மனைக்கான நிலத்தை ஒதுக்கியதாகவும், இதில் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு முறைகேடு நடந்திருப்பதாகவும் சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா, ஆளுநரிடம் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
பின்னர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதியுடன், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தார்கள்.
இதே பிரச்சினைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக்க் கோரி அமலாக்கத்துறை அறிவிக்கை அனுப்பியது. அதனை ரத்து செய்யக் கோரி கருநாடக நீதிமன்றத்தில் பார்வதி, பைரதி சுரேஷ் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதை ஏற்று அமலாக்கத்துறை வழங்கிய அறிவிக்கையை ரத்து செய்து கருநாடகா உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (21.7.2025) காலையில் நடைபெற்றது. அமலாக்கத்துறை சார்பில் அரசின் கூடுதல் சொலிஸ்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமலாக்கத்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அரசியல் பிரச்சினைகளுக்காக அமலாக்கத் துறையை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை இயக்குநரகத்திற்கு கேள்வி எழுப்பினார்.
“அமலாக்கத் துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தக் கூடாது. எங்களை வாயைத் திறந்து எதுவும் சொல்லக் கட்டாயப்படுத்தாதீர்கள். அப்படிச் செய்தால் அமலாக்கத் துறை பற்றி நாங்கள் மிகவும் கடுமையாகப் பேச வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.
இதைத்தொடர்ந்து கூடுதல் சொலிஸ்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, அமலாக்கத்துறை அனுப்பிய (பார்வதி, பைரதி சுரேஷ் ஆகியோருக்கு அனுப்பிய) அறிவிக்கையைத் திரும்ப்ப் பெற்றுக் கொள்வதாக்க் கூறினார்.
இதையடுத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருநாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி தீர்ப்பை உறுதி செய்து அமலாக்கத்துறையின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.