ரவிக்குமார் கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதில்
புதுடில்லி, ஜூலை 22 தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகுதான் இந்தியா முழுவதும் மாணவர் சேர்க்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கேட்ட கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுதாரி எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
கல்வி அமைச்சர் பதிலளிப்பாரா?
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மக்களவையில் சமர்ப்பித்த 5 வினாக்களில், மாணவர் சேர்க்கையில் வீழ்ச்சி தொடர் பான வினா எழுப்பிய விவரம்:
‘‘2018-2022 மற்றும் 2023-2024க்கு இடையில் அனைத்து கல்வி நிலைகளிலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் காணப்பட்ட நிலவரத்தின்படி, பள்ளி சேர்க்கை எண்ணிக்கையில் 1.55% மாணவர்கள் குறைந்திருந்தனர். குறிப்பிடத் தக்க இந்தச் சரிவை சரிசெய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்களைத் தெரிவியுங்கள். பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராட்டிரா முதலான மாநிலங்களில் அதிகமாகக் காணப்படும் மாணவர் சேர்க்கை சரிவை எதிர்கொள்ள செயல் படுத்தப்படும் குறிப்பான நடவடிக்கைகள், இந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் ஆதரவு குறித்த விவரங்கள் ஆகியவற்றைத் தர வேண்டும்.
மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் காணப்பட்ட இந்த சரிவுக்கான மூல காரணங்களை சரி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளின் விவரங்கள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு குறைபாடுகள்; மற்றும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்துவதற்கும் இந்தக் காலகட்டத்தில் பள்ளி சேர்க்கைக் குறைவதற்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா, அப்படியானால், அதன் விவரங்களைத் தருக?” என்று ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.
மாணவர் சேர்க்கை குறைந்தது
இதற்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுதாரி எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
“கல்வி என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. அரசு பள்ளிகளில் ஆரம்ப வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை மாணவர் சேர்க்கை 2018-2019 ஆம் ஆண்டில் 13 கோடியே 11 லட்சத்து 13 ஆயிரத்து 434 ஆக இருந்தது. 2023-2024-இல் இது 12 கோடியே 42 லட்சத்து 56 ஆயிரத்து 425 ஆகக் குறைந்து இருந்தது.
அதாவது பள்ளி மேலாண்மை குழுக்கள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளின் முழுமையான பங்கேற் புடன் “மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவோம்” என்ற பிரச்சாரத்தில் பங்கேற்கவும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை அமைச்சர்மட்டத்தில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. என்றுஅந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில்….
தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பிறகுதான் மாணவர் சேர்க்கையில் பெரும் சரிவு ஏற்பட்டதை ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டது. அதே நேரத்தில் தேசியக் கல்விகொள்கையை ஏற்காத மாநிலங்களான தமிழ்நாடு கேரளா, மேற்குவங்கம் இந்த மூன்று மாநிலங்களிலும் கடந்த 4 ஆண்டுகளாக பள்ளி செல்பவர்களின் விகிதம் பிற மாநிலங்களை விட அதிகமாகி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் காலை உணவுத்திட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு சலுகைகள், நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டம் போன்றவை இருபாலரும் பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக உயர்கல்வி படிக்க இயலாத நிலையில் அவர்களுக்கு நிதியுதவி அளித்து, அவர்கள் படிப்பைத் தொடர பெரும் உதவியாக இருப்பதால் குறிப்பாக அரசுப்பள்ளியில் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தேசியக் கல்விகொள்கை அமல்படுத்திய மாநிலங்களில் பள்ளிகள் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து வருகிறது.