ஜகார்த்தா, ஜூலை 22- இந்தோனேசியாவின் சுலாவெசித் தீவுக்கு அப்பால் நேற்று (ஜூலை 20, 2025) பயணம் செய்துகொண்டிருந்த ஒரு பயணிகள் படகில் தீப்பிடித்ததில் அய்வர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் 284 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது படகில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்த சரியான தகவல் உடனடியாகத் தெரியவில்லை. படகில் பெரிய அளவில் தீ மூண்டதும், பெரும் பீதியடைந்த பயணிகள் பலர் உடனடியாகக் கடலில் குதித்தனர். அப்பகுதியில் பெருந் தீயும், கரும்புகையும் காணப் பட்டன.
உடல்கள் மீட்பு
உயிர்க்காப்பு உடை அணிந்து கடலில் குதித்தவர்கள், உதவி வரும்வரை கடலிலேயே காத்திருந்தனர். தகவலறிந்து, அந்த வட்டாரத்திலிருந்த மூன்று கடற்படைக் கப்பல்களும், பல மீனவப் படகுகளும் உடனடியாக உதவிக்குச் விரைந்தன. கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட அய்ந்து பேரின் உடல்கள் இந்த விபத்தில் மீட்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்த மாதத் தொடக்கத்தில், பாலி தீவுக்கு அருகே படகு ஒன்று மூழ்கியதில் 19 பேர் உயிரிழந்தனர்; மேலும் 16 பேரைக் காணவில்லை. இருப்பினும், கடந்த வாரம் மெந்தாவாய் தீவுகளுக்கு அருகே நிகழ்ந்த மற்றொரு படகு விபத்தில், படகில் இருந்த அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.