காஸா, ஜூலை 21- காஸாவில் அய்க்கிய நாட்டு நிறுவனத்தின் உதவி லாரிகளுக்காகக் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 67 பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடுமையான பட்டினியால் வாடிய மக்கள், உலக உணவுத் திட்டத்தின் 25 லாரிகளை நோக்கிச் சென்றபோது இஸ்ரேலிய ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலில் இருந்து லாரிகள் சுங்கச்சாவடியைக் கடந்து சென்ற உடனேயே, மக்கள் கூட்டம் தங்கள் லாரிகளை நோக்கி வந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டது.
இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேலியத் தற்காப்புப் படை, உடனடி அச்சுறுத்தலை அகற்ற எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறியுள்ளது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அது மறுத்துள்ளது. காஸா சுகாதார அமைச்சகம், மக்கள் தாங்க முடியாத பசியோடும் களைப்போடும் உணவு லாரிகளை நோக்கிச் சென்றதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கை
‘மிகவும் கடுமையானது’ என்கிறது புதிய ஆய்வு
வாஷிங்டன், ஜூலை 21- அமெரிக்காவிலிருந்து குடியேறிகளை வெளியேற்றுவதில் அதிபர் டோனல்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக இருப்பதாகப் பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் கருதுவதாக சி.என்.என். தொலைக்காட்சி நடத்திய புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 55 விழுக் காட்டினர், அதிபர் டிரம்ப் குடியேற்றக் கொள்கையில் கடுமையான போக்கைப் பின்பற்றுவதாகத் தெரிவித் துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இதே ஆய்வு நடத்தப்பட்டபோது, இவ்வாறு கருதியவர்களின் எண்ணிக்கை 45 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத் தக்கது.
அதிபர் டிரம்ப்பின் எதிர்த்தரப்பான ஜனநாயகக் கட்சியினரில் 90 விழுக்காட்டினர், அவரது தீவிர நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். அதேவேளையில், அவரது குடியரசுக் கட்சியினரில் 85 விழுக்காட்டினர் அதிபர் செய்வது சரிதான் என்று கருதுவதாக சி.என்.என். ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இது குடியேற்றக் கொள்கை தொடர்பாக அமெரிக்க மக்களிடையே நிலவும் ஆழமான கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது.