புவனேசுவர், ஜூலை 20 ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா பகுதியில் நேற்று (19.7.2025) காலை 15 வயது சிறுமி தோழி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்றபோது இளைஞர்கள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமி ஆபத்தான நிலையில் புவனேசுவர் எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய குற்ற வாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவரும் பிஜு ஜனதா தளம்தலைவருமான நவீன் பட்நாயக் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பட்நாயக் தனது எக்ஸ் பதிவில், “பூரி மாவட்டத்தின் பாலங்கா பகுதியில் ஓர் இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை முயற்சி கொடூரமானது. இந்த கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஒடிசாவில் கல்லூரியில் ஓர் இளம் பெண் (ஆசிரியரால் பாலியல் தொல்லை செய்யப்பட்டு) தனக்கு நீதி கிடைக்காததால் தீக்குளித்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்குள்ளாகவும், கோபால்பூரில் நடந்த திகிலூட்டும் சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்குள்ளாகவும் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
பெண்களுக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் ஒடிசா முழுவதும் அன்றாடம் பதிவாகின்றன. இவை தனிப்பட்ட வன்முறை சம்பவங்கள் அல்ல. இந்த சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் தொடர்ந்து நடப்பது, ஆளும் அரசின் அமைப்புரீதியான தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது.
தற்போதைய அரசின் கீழ் குற்றவாளிகள் தைரியம் அடைந் துள்ளனர், தண்டிக்கப்படுவது குறித்து கவலைப்படுவதில்லை என்பதைக் காட்டுகிறது.
அரசு செயலற்ற தன்மையால் ஒடிசா பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அரசு செயல்படுமா? ஒடிசாவின் பெண்களும், சிறுமிகளும் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.