பெங்களூரு, ஜூலை 18 பெங்களூரு பாரதிநகர் பகுதியில் 15.7.2025 அன்று இரவு பிரபல ரவுடி சிவாவை பத்து பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக பாரதிநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிவபிரகாசின் தாயார் விஜயலட்சுமி, பாரதிநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், எனது மகன் சிவபிரகாஷ், வீட்டில் இருந்து வெளியில் வந்தபோது, ஸ்கார்பியோ காரில் வந்த சுமார் 8 முதல் 10 பேர் அவனை கொலை செய்தனர். எனது மகனை கொலை செய்தவர்களின் அடையாளம் எனக்கு தெரியும் ஜெகதீஷ், கிரண், விமல், அனில் ஆகியோர் கொலைக்கு காரணம். மேலும் எனது மகனை மேனாள் அமைச்சரும், கிருஷ்ணராஜபுரம் தொகுதி பாஜ சட்டப் பேரவை உறுப்பினருமான பைரதி பசவராஜ் தூண்டுதல், பேரில் கொலை நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாரதிநகர் காவல்துறையினர். ஜெகதீஷ், கிரண், விமல், அனில் மற்றும் மேனாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான பைரதி பசவராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் பைரதி பசவராஜ் 5ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியில்
படித்த பள்ளியிலேயே தலைமையாசிரியை ஆன பழங்குடியினப் பெண்
கன்னியாகுமரியில் தான் படித்த பள்ளியிலேயே பழங் குடியின பெண், தலைமையாசிரியை யாக பதவி ஏற்றுள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் பத்துகாணி அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி, பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து வட்டப்பாறை தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்த நிலையில் தற்போது பத்து காணி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியையாக பொறுப்பேற்றுள்ளார்.
ஷீலாவுக்கு மது என்ற கணவரும், சபரீஷ்,சக்திவேல் என்ற 2 மகன்களும் உள்ளனர். மது ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு சென்று வருகிறார். சபரீஷ் 12-ஆம் வகுப்பும், சக்திவேல் 9-ம் வகுப்பும் படிக்கிறார்கள். தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக, பழங்குடியின பெண் ஷீலா பொறுப்பேற்ற சம்பவத்தை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் அவருடைய பெருமை பற்றிய காட்சிப் பதிவும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.