சுயமரியாதையுள்ள மனிதராக வாழ வேண்டும்!
துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாணவர்களுக்கு வேண்டுகோள்
துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாணவர்களுக்கு வேண்டுகோள்
குற்றாலம் பயிற்சிப் பட்டறையின் சிறப்பு!
திராவிடர் கழகம் தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் நடத்தி வரும், ‘‘பெரியாரியல் பயிற்சிப் பட்டறை” 1978 இல் அன்னை மணியம்மையார் காலத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் 10 நாள்களாக மாற்றம் பெற்றது. இவ்வகுப்புகள் பெரும்பாலும் குற்றாலத்தில் உள்ள கேரளா பிடபிள்யூ குடிலில் நடைபெற்று வந்தது. அங்கு மாணவர்கள் தரையில் தான் அமர வேண்டும். தரையில் அமர்ந்துதான் உண்ண வேண்டும். இரவு அதே தரையில் தான் படுத்தும் உறங்க வேண்டும். அன்னை மணியம்மையார் அவர்களே அப்படி உறங்கியிருக்கிறார். காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் பயிற்சிப் பட்டறையின் காலம் 7 நாள்கள் – 5 நாள்கள் என்று மாற்றம் பெற்றது.
பராமரிப்பு மற்றும் வேறு பல காரணங்களால் “கேரளா பிடபிள்யூ குடிலில்” நடைபெற முடியாமல் போய், தென்காசி பேரூராட்சி கட்டிடம் மற்றும் அங்குள்ள திருமண மண்டபம் என்று மாறி மாறி நடந்து வந்தது. பின்னர் வள்ளல் வீகேயென் அவர்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் சிறப்பை நேரில் கண்டு வியந்து, ‘இப்படிப்பட்ட நிகழ்ச்சி, எந்த வசதியும் இல்லாமல் நடப்பதா?’ என்று, இதற்கென தனி கட்டடம் கட்டித் தருவேன் என்று கூறி, அப்படியே கட்டியும் தந்தார். ஆண்டுகள் சில கடந்து, அந்த கட்டடமும் பராமரிப்பு காரணமாக மறுபடியும் திருமண மண்டபம் என்று கடந்த 45 ஆண்டுகளாக பயிற்சிப்பட்டறை நடத்தும் இடங்கள் மாறினாலும், ‘‘குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” என்பது மட்டும் மாறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மறுபடியும் வள்ளல் வீகேயென் மாளிகையின் பராமரிப்பு பணிகள் முடிந்து நடைபெற்றது. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்களை ஹிந்துத்துவா எனும் பேராபத்திலிருந்து காப்பாற்றி, அவர்களை மானமும், அறிவும் பெற்ற மக்களாக மாற்றி, அத்தகைய பாசிச சக்திகளுக்கு ஆட்படாமல் தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் இம்மாணவர்கள் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் விரவி, வாழ்ந்து வருவது தான் இந்தப் பயிற்சிப் பட்டறையின் விழுமிய பயன்.
தென்காசி, ஜூலை 16 குற்றாலம் பயிற்சிப் பட்டறை யின் நிறைவு நாளில் கழகத்தின் துணைத் தலை வர், “பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு” எனும் தலைப்பில் வகுப்பெடுத்ததோடு, பயிற்சிப் பட்டறை சிறக்க பாடுபட்டவர்களை கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டினார்.
தென்காசி குற்றாலம் தரை தளத்தில் பயிற்சிப் பட்டறைக்கான அரங்கம் உள்ளிட்ட வீகேயென் பல மாடிக் கட்டடத்தில், 2025 ஜூலை 10 முதல் 13 வரை 46 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. அதில் நான்காம் நாளாக; அதாவது 13.07.2025 அன்று 86 இருபால் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டு பாடங்களைக் கேட்டு பயன்பெற்றனர். காலை 9:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், ”நிறைவு விழா!” உள்ளிட்ட 5 வகுப்புகள் நடைபெற்றன.
ஆழமான தலைப்புகளும்
எளிமையான விளக்கங்களும்!
எளிமையான விளக்கங்களும்!
பேராசிரியர் ந.எழிலரசன், “சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த பெண் உரிமைப் புரட்சி”, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், “பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு”, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், “ஹிந்து – ஹிந்துத்துவா – ஆர்.எஸ்.எஸ்.”, மாணவர்களின் கேள்வி களுக்கு துணைத் தலைவர் பதில் சொல்லிய, “கேட்டலும் கிளத்தலும்” போன்ற 4 வகுப்புகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து நிறைவு விழா நடை பெற்றது.
வகுப்புகளில் அகழ்ந்தெடுத்த
கருத்து முத்துக்கள்!
கருத்து முத்துக்கள்!
1929 இல் நடைபெற்ற செங்கல்பட்டு சுயமரியாதை முதல் மாகாண மாநாட் டில் நிறைவேற்றம் செய்யப்பட்ட பெண்ணுரிமைத் தீர்மானங்களால் தான் தமிழ்நாட்டில் பெண்ணுரிமைப் புரட்சி ஏற்பட்டது; மாணவர்கள் வகுப்புக்கு வந்தது முக்கியமல்ல, என்ன தெரிந்து கொண்டோம்? என்ன புரிந்து கொண்டோம்? அதை எப்படி வாழ்க்கையில் பயன்படுத்த போகிறோம்? என்பது தான் முக்கியம்; இவ்வளவு வசதியாக பயிற்சி முகாமை நடத்துவதற்கு வாய்ப்பளித்த மறைந்த வள்ளல் வீகேயென் அவர்களுக்கு நன்றி காட்டக்கூடிய வகையில் எழுந்து நின்று வீரவணக்கம் செலுத்துவோம்; நானும் மனிதன் நீயும் மனிதன் இரு வரும் சமமாக வாழ்வோம் என்றார் பெரியார்; பார்ப்பனர்களே நீங்கள் வாழை இலை போன்றவர்கள், நாங்கள் முள் போன்றவர்கள், இரண்டில் எது மோதினாலும் இழப்பு உங்களுக்குத்தான்; மனிதனாக வாழ வேண்டும் என்கிறது திராவிடர் கழகம்! அப்படி வாழக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்.சொல்கிறது! இரண்டில் எது வேண்டும்? நீங்களே முடிவு செய்யுங்கள்; ஹிந்து மதத்தின் தலைவராக கருதப்படக்கூடிய காஞ்சி சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியார், “ஹிந்து மதம் என்றே ஒன்று கிடையாது. சைவம், வைணவம் உள்ளிட்ட சண் மதங்களையும் சேர்ந்து வெள்ளைக்கார கவர்னர் சர்.வில்லியம் ஜோன்சு 1794 இல் பெயர் வைத்தார்’’ என்றார். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். மட்டும் தான் 3 முறை தடை செய்யப்பட்ட அமைப்பு உள்ளிட்ட கருத்துகள் நான்காம் நாள் வகுப்பில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டன.
முன்னிலை வகித்து சிறப்பித்தவர்கள்!
நிறைவு விழா நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் – பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில், தென்காசி மாவட்டக் காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை, மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்த நாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், பகுத்தறிவு பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, ஊடகத்துறை
கே.டி.சி.குருசாமி, தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் மா.பால் ராசேந்திரம், இளை ஞரணி மாநிலச் செயலாளர் நாத்திக. பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் சவுந்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். நிறைவாக தென்காசி மாவட்டச் செயலாளர் சண்முகம் நன்றியுரை கூறி, சிறப்பாக நடைபெற்ற 46 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை இனிதே முடித்து வைத்தார்.