ராகுல் காந்தி கடும் தாக்கு
புதுடில்லி, ஜூலை 16 “மழைக் காலங்களில் பொதுக் கட்டமைப்புகள் சீரழிவதற்குப் பாஜக அரசின் ஊழலே காரணம். இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திட்டமிட்ட கொள்ளை!
தனது முகநூல் பக்கத்தில் நேற்று (15.7.2025) அவர் வெளியிட்ட பதிவில், “ஒவ்வொரு முறை பாலங்கள் இடிந்து விழும்போதும், மழை வெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்படும்போதும், ரயில்கள் தடம் புரளும்போதும், அது கட்டுமானத்தின் குறைபாடு அல்ல; மாறாக மக்களின் பைகளிலிருந்து எடுக்கப்படும் திட்டமிட்ட கொள்ளை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற விபத்துகளின்போது பல அன்புக்குரியவர்கள் உயிரிழக்கின்றனர். ஆனால், அதற்கு யாரும் பொறுப்பேற்பதே இல்லை. இவை விபத்துகள் அல்ல; கொலைகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக ஆட்சியில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்:
குஜராத் மாநிலம் ஜூனாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்னரே இடிந்து விழுந்தது.
ராஜ்கோட்டில் அண்மையில் பெய்த மழையில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.
டில்லி பிரகதி மைதானில் ரூ. 15,000 கோடி செலவில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை மழையில் மீண்டும் மூழ்கியது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்திலும், உத்தரகண்ட் மாநிலத்தில் தனக்பூர் முதல் பித்ரோகர் வரையிலான நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும், பாலமும் ஆற்றில் மூழ்கிவிடும்.
பீகாரில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பாலங்கள் இடிந்து விழுந்தன. சத்தீஸ்கரில் பல்ராம்பூரில் அண்மையில் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை மழையில் அடித்துச் செல்லப்பட்டது.
ஊழலே காரணம்!
‘‘இதுபோல, பாஜக ஆட்சியில் கட்டப்பட்டுச் சேதமடைந்த பல பொதுக் கட்டமைப்புகளை உதாரணமாகக் கூறலாம். கிராமங்கள் முதல் நகரங்கள் வரையுள்ள அனைத்து மக்களும் இதுபோன்ற பொதுக் கட்டமைப்புகள் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகின்றனர். வரிகளை அரசு உயர்த்துகிறது. ஆனால், அந்தப் பணம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது. சாலை, பாலங்கள், மருத்துவமனைகள், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட மக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்குத்தான் வரிகள் வசூ லிக்கப்படுகின்றன” என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
மேலும், “பாஜக ஆட்சியில் மக்களின் வரிப் பணம் ஊழல் தலைவர்களின் பைகளுக்கும், அரசு கமிஷன் முகவர்களின் கஜானாக்களுக்கும், பளபளப்பான விளம்பரப் பதாகைகளுக்கும் செலவிடுவதற்காகச் செல்கின்றன. இனியும் நாடு மௌனமாக அமர்ந்திருக்கக் கூடாது. தனது தவறுகளுக்கு அரசைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது’’ என்று தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.